Published : 20 Apr 2022 06:40 PM
Last Updated : 20 Apr 2022 06:40 PM

நான் பாஜகவில் இல்லை... திராவிட கருத்துகளில்தான் ஈர்ப்பு: மன்னிப்புக் கோரிய பாக்யராஜ் விளக்கம்

கோப்புப் படம்

சென்னை: "குறைப்பிரசவம் என்று நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அது, யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார். மேலும், தான் பாஜகவில் இல்லை என்றும், திராவிட கருத்துகளால் மட்டுமே தாம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் சென்றாலும் ஒய்வில்லாமல் நாட்டுக்காக உழைக்கிறார். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. அதனால், விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. இந்தியாவுக்கு மோடி போன்ற பிரதமர்தான் தேவை. ஆனால், பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதுமே சிலர் தயாராக உள்ளனர். மோடி ஜி-க்கு நான் ஓர் ஆலோசனை வழங்குகிறேன். உங்களை விமர்சிப்பவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். உங்களைத் தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு வாயும் சரியாக இயங்கவில்லை.. காதும் சரியாக கேட்கவில்லை” என்று கூறினார்.

இதையடுத்து, இயக்குநர் பாக்யராஜ் இந்தக் கருத்துக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், தனது கருத்துக்கு பாக்யராஜ் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “குறைப்பிரசவம் என்று நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. புண்படுத்தும் நோக்கில் அதனை கூறவில்லை. கிராமங்களில் விமர்சிக்க கூறப்படும் சொல்லாடல் அது.

எனினும், நான் கூறியது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல. திராவிட தலைவர்களை பார்த்தே நான் வளர்ந்தேன். என்னுடைய சினிமாவிலும் திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்து இருக்கும். என்னை அறியாமல் திராவிட கருத்துகள்தான் என் மனதில் இருக்கும். 30 வருடங்களுக்கு முன்னரே என்னுடைய படங்களில் சாதி போன்றவை இருக்கக் கூடாது என்ற திராவிட கருத்துகள்தான் வந்திருக்கிறது. இனியும் அது தொடரும். இதுதான் கடைசிவரை என் படங்களில் எதிரொலிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x