Published : 17 Jun 2014 10:00 AM
Last Updated : 17 Jun 2014 10:00 AM
யாருக்கும் அணு அளவும் கேடு நினைக்காத ஒருவன் வன்முறைச் சூழலில் தன்னை அறியாமல் மாட்டிக்கொள்வதுதான் ‘நான்தான் பாலா’.
பெருமாள் கோயில் குருக்கள் பாலா (விவேக்) கும்பகோணத்தில் உள்ள அக்கிரகாரம் ஒன்றில் வசிக்கிறான். பாலாவுக்குப் பெற்றோரும் பெருமாளுமே உலகம். அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதை பாக்கியமாக எண்ணி வாழ்கிறான். எப்போதோ ஒருமுறை பெருமாள் கோயில் நகை திருட்டுப்போன குற்றத்திற்காக பாலாவின் தந்தை மீது வழக்கு ஒன்று நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதிலிருந்து தந்தையை விடுவிக்க வேண்டும் என்பது பாலாவின் கவலை.
ஒரு கட்டத்தில் பாலாவின் தந்தை கைது செய்யப்படுகிறார். அவரை விடுவிக்க யாரும் உதவி செய்யவில்லை. பாலா பெருமாள் முன் கண்ணீர் பொங்க நிற்கிறான். அதே நேரத்தில், பூச்சி (வெங்கடராஜ்) என்னும் கூலிக்குக் கொலை செய்யும் ரவுடி காஞ்சிபுரத்தில் இருந்து கும்பகோணத்திற்கு வருகிறான். தொழில் போட்டியால் யாரோ யாரையோ கொல்ல நினைக்கிறார்கள். கொலை செய்யும் கையாளான பூச்சி கும்பகோணத்தில் காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறான். காரியம் எந்த தடங்கலும் இல்லாமல் முடிந்ததற்காகப் பெருமாளுக்கு நன்றி சொல்லக் கோயிலுக்கு வருகிறான்.
அங்கே கையறு நிலையில் இருக்கும் பாலாவைச் சந்திக்கிறான். பாலாவுக்கு அவன் உதவுகிறான். அவன் கொலைகாரன் என்று தெரியாமல் பாலா அதை ஏற்றுக்கொள்கிறான். பெற்றோர் இறந்த பிறகு ஆதரவற்று நிற்கும் பாலா, பூச்சியைத் தேடிக் காஞ்சிபுரத்துக்கு வருகிறான். அங்கே பூச்சியுடன் நட்பு மலர, ஒரு பெண்ணுடன் காதலும் மலர்கிறது.
காவல்துறை பூச்சியைத் துரத்த, கொலையாளியின் நட்பால் பாலாவுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. தார்மீக உணர்வு கொண்ட, பாலாவின் நட்பும் காதலும் என்ன ஆயின என்பதுதான் மீதிக் கதை. வெளிநாட்டு வேலையைக்கூடத் தவிர்த்து வயது முதிர்ந்த தாய் தந்தைக்குப் பணிவிடை செய்வதை வரமாக நினைக்கும் மகனாக விவேக் நடிப்பை வெளிப்படுத்தும் காட்சி, தனக்கு அடைக்கலம் தந்த நண்பன் கெட்ட காரியத்தில் இறங்குகிறான் என்றதும் அவனைத் திருத்த முயற்சிக்கும் சூழல் இப்படிச் சில இடங்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும் காலம் காலமாகத் தமிழ் சினிமா பயணிக்கும் பாதையிலேயே திரைக்கதை பயணிக்கிறது.
படத்தின் நெருக்கடிகள், திருப்புமுனைகள், பாத்திரங்கள், எல்லாவற்றிலும் பழைய நெடி. படம் நகரும் வேகம் பொறுமையைச் சோதிக்கிறது. நட்பு, காதல் ஆகியவை அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. சோகமான காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன. மயில்சாமியும், செல்முருகனும் சில இடங்களில் அடிக்கும் டிராக் காமெடி பாணி எல்லாம் அரதப் பழசு.
ஆரம்பம் முதலே தொய்வுடன் நகர்ந்து போகும் படத்தின் போக்கு கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் மட்டுமே சலிப்பைப் போக்குகிறது. சில வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. ‘நாம குழந்தையா இருக்குறப்போ அவா பாத்துண்டா.. இப்போ அவா குழந்தைகள்.. நாமதானே பார்த்துக்கணும்’ என்ற வசனம் அவற்றில் ஒன்று.
படத்தில் முக்கியமான வேறொரு பிரச்சினையும் உள்ளது. பிராமணர்கள் தங்களோடு பழகுபவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவார்கள் என்று பொருள்படும் வசனங்கள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைப் பற்றியதாக அல்லாமல் ஒட்டுமொத்தமாக பிராமணர்களை இப்படிச் சித்தரிப்பதைச் சாதிப் பெருமை பேசுவதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. சாதிக்கு ஏற்ற குணம் என்னும் பார்வை மிக அபாயகரமான பிற்போக்குப் பார்வை. அதை முன்வைப்பதுபோன்ற வசனங்கள் ஆட்சேபத்துக்கு உரியவை.
சற்று இடைவேளைக்குப் பின் மீண்டும் களம் இறங்கிய விவேக் மீதும், அவர் நாயகன் அவதாரம் எடுக்கும் இந்தப் படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. நடிப்பில் அவர் சோடைபோகவில்லை என்றாலும் வலுவான கதை அமையாததால் அவர் முயற்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறது. சீரியஸான பாத்திரத்தைத் தன்னால் கையாள முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். காதல் உணர்வைக் காட்டும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கஷ்டப்படு(த்து)கிறார்.
நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ஈர்க்கவில்லை. வெங்கட்ராஜின் நடிப்பு மனதில் நிற்கிறது. தனி காமெடியனாக முன்னேறியிருக்கும் செல் முருகனின் நகைச்சுவை நடிப்பில் தன்னம்பிக்கை தெரியும் அளவுக்கு தேர்ச்சி தெரியவில்லை. வெங்கட் க்ரிஷியின் இசையில் சிறப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை. உணவு வகைகளை வரிசைப்படுத்தும் பாடல் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் ரசிக்க வைக்கிறது
சலித்துப்போன திரைக்கதை படத்தை பலவீனமாக்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT