Published : 22 Apr 2016 07:52 AM
Last Updated : 22 Apr 2016 07:52 AM
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக பதவியேற்றனர். எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர் சங்க நிலத்தை ரூ.2 கோடி கடன் வாங்கி நிலத்தை மீட்டனர். நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் வந்த வருவாயை வைத்து நடிகர் சங்கத்திற்கு இருந்த கடனை அடைத்திருக்கிறார்கள்.
வரலாற்று நிகழ்வு
இது குறித்து நடிகர் சங்கச் செயலாளர் விஷாலிடம் கேட்டபோது, "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சனிக்கிழமை இரவு வரை ரூ.2 கோடி கடன் இருந்தது. தற்போது அந்த கடனை அடைத்து ரூ.8 கோடி கையில் இருக்கிறது. நடிகர் சங்கப் பத்திரத்தை மீட்கவே அந்த ரூ.2 கோடி கடன் வாங்கினோம்.
தற்போது நடிகர் சங்க வங்கிக் கணக்கில் ரூ.8 கோடி இருக்கிறது. அதற்கு வரும் வட்டியை வைத்தே நிறைய உதவிகள் பண்ண முடியும். மருத்துவ உதவி வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு 40 சதவீதம் மட்டுமே செய்ய முடிந்தது. அப்போது பணம் அவ்வளவுதான் இருந்தது. இனிமேல் மருத்துவ உதவி, படிப்பு உதவி எல்லாமே பண்ண முடியும். ரூ.100 கோடி சொத்துக்கான பத்திரம் எவ்வித பிரச்சினையும் இன்றி கையில் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம். இது கண்டிப்பாக ஒரு வரலாற்று நிகழ்வாக தான் பார்க்கிறேன். எங்கள் அணியில் இருக்கும் அனைவரின் உழைப்பும் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது.
கட்டிடப் பணிக்காக பட வேலைகள் தொடக்கம்
அடுத்ததாக அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம். அதற்காக நானும், கார்த்தியும் இலவசமாக படம் நடிக்க இருக்கிறோம். அதற்கான இயக்குநர் தேர்வை தற்போது தீவிரப்படுத்தி இருக்கிறோம். அதன் மூலமாக வரும் பணத்தை வைத்து கட்டிடப் பணிகளை ஆரம்பிப்போம்.
சிம்புவிடம் நானே பேசினேன்...
வரலாற்றில் முதல் முறையாக உறுப்பினர் பொறுப்பில் இருந்து சிம்பு விலகுகிறார். அது அவரின் தனிப்பட்ட கருத்து. நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை அனைத்து விதத்திலும் உதவி பண்ண முன்வந்தோம். அதை சிம்பு மறுக்க முடியாது. பீப் பாடல் சர்ச்சை எழுந்த போது நான், பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் சிம்புவிடம் பேசினோம். அவர் சட்டப்படி பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன போது நாங்கள் என்ன பண்ண முடியும். அவருடைய விருப்பத்திற்கு விட்டு விட்டோம்.
நட்சத்திர கிரிக்கெட்டில் விளையாடியவர்களை ஜோக்கர்ஸ் என்று சொல்லியிருக்கிறார். ஒரு குடும்பமாக அனைத்து மாநில சூப்பர் ஸ்டார்களும் வந்து தொடர்ச்சியாக 12 மணி நேரம் ஒரு நிகழ்ச்சி பண்ணியிருக்கிறோம். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி இனிமேல் நடக்குமா என்று கூடத் தெரியாது. சூர்யா சார் உட்பட 8 நடிகர்கள் இணைந்து கிரிக்கெட் அணியை வழிநடத்தினார்கள். இதெல்லாம் யார் ஜோக்கர், எதில் ஜோக்கர்களாக தெரிந்தோம் என எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரி யாரும் நினைக்க முடியாது.
திமுக விளம்பர சர்ச்சை
எங்களைப் பொறுத்தவரை கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை விற்றுவிட்டோம். அதில் இடையே இந்த விளம்பரத்தை போடக் கூடாது என்று எங்களால் தடுக்க முடியாது. எனக்கே கிரிக்கெட் போட்டிக்கு அடுத்த நாள் தான் தகவலாக சொன்னார்கள். நாங்கள் கிரிக்கெட் போட்டி, ஒருங்கிணைப்பு என மற்ற விஷயங்களில் பரபரப்பாக இருந்ததால் டிவி பார்க்கவில்லை. நடிகர் சங்கத்திற்கும் தனியார் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிக்கு இடையே திமுக விளம்பரம் ஒளிபரப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" என்று விஷால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT