Published : 14 Mar 2022 12:04 PM
Last Updated : 14 Mar 2022 12:04 PM

திரை விமர்சனம்: எதற்கும் துணிந்தவன்

ஒரு பெண்ணின் தற்கொலை, இரு கிராமங்கள் இடையே தீராத பகையை, தீயாய் கொண்டுவந்து சேர்க்கிறது. இதற்கிடையே, இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்குகின்றனர் மத்திய அமைச்சர் மகன் வினய்யும் அவரது கும்பலும். ஒரு கட்டத்தில் வழக்கறிஞர் சூர்யா வீட்டிலேயே இந்த கும்பல் கைவைக்க, அவர் என்ன செய்கிறார் என்பது கதை.

பக்கா கமர்ஷியல் படத்துக்கு பக்குவமாக இறங்கி அடித்திருக்கிறார் சூர்யா. காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அத்தனை உணர்ச்சிகளிலும் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆதினியாக வரும் பிரியங்காவும் மனதில் பதிகிறார். வந்துபோகும் நாயகியாக இல்லாமல் அவருக்கும் கதையில் ஆழமான காட்சி வைத்திருப்பது சிறப்பு.

சத்யராஜ் - சரண்யா கலகலப்பில் கலக்குகின்றனர். சூரி, பிரியதர்ஷினி, பிரியங்கா மோகன், ‘குக்வித் கோமாளி’ புகழ் ஆகியோரிடம் சிக்கி இளவரசு படும் அவஸ்தைகள் திரையரங்கை அல்லோலப்படுத்துகின்றன. வில்லன் இன்பாவாக வினய் பயமுறுத்துகிறார். ஆனால், அவரது முகபாவங்கள் ஒரேமாதிரி இருக்கின்றன.

சில காலம் முன்பு ஊடகங்களை ஆக்கிரமித்த சம்பவம் முதல், அடிக்கடி செய்தித்தாள்களில் வருகிற ஆபாசவீடியோ விவகாரங்கள் வரை, தொழில்நுட்பத்தால் பெண்களை பகடையாக்கி அத்துமீறும் ஆண்களுக்கு எதிரானபிரச்சினையை துணிந்து கையிலெடுத்து, அதனுடன் குடும்பம், ஊர் சென்டிமென்ட் கலந்து கமர்ஷியல் சினிமாவை தந்திருக்கிறார் பாண்டிராஜ். பல இடங்களில் வசனங்கள், நின்று கவனிக்க வைக்கின்றன. இமானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தை பொழுதுபோக்கு தளத்திலும் தூக்கி நிறுத்துகின்றன.

திருட்டுக் கல்யாணம் நடக்கும் கோயில் கும்பாபிஷேகக் காட்சியை இயக்குநர் சித்தரித்த விதமும், அதை பிரம்மாண்டமாக படமாக்கிய ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் ரகளை.

சீரியஸான விவகாரங்களின் சிக்கலை தீர்க்கவேண்டிய ஹீரோ, சில நேரம் காமெடி, ரொமான்ஸ் பக்கம் திடீரென திரும்புவதில், சீரியஸ் கதையை சீரியல் ஆக்கிய ‘எஃபெக்ட்’ படத்தில் இருக்கவே செய்கிறது. பெண்களை ஆண்கள்தான் காப்பாற்ற வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துகிறது படம். கிளைமாக்ஸில் ஓரிடத்தில் குவிக்கப்படும் குற்றவாளிகளிடம் அவர்களது குடும்பத்தினர் நடந்துகொள்ளும் விதம் டிவி சீரியலைவிட மோசம். மாஸ் மசாலா சினிமாவுக்கான அம்சங்கள் தூக்கலாக இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அறிவுரையாக இல்லாமல் சற்று அழுத்தமாக பேசிய விதத்தில், ‘எதற்கும் துணிந்தவனை’ நிபந்தனையின்றி பாராட்டலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x