Last Updated : 12 Mar, 2022 05:39 PM

1  

Published : 12 Mar 2022 05:39 PM
Last Updated : 12 Mar 2022 05:39 PM

முதல் பார்வை | மாறன் - என்ன சிம்ரன் இதெல்லாம்?

நேர்மையான ஊடகவியலாளன் தனது நேர்மையால் விளையும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராட்டமே 'மாறன்'.

தந்தையை போல நேர்மை தவறாத 'இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்' தனுஷ். இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகிறார். இதன்பின் ஏற்படும் போராட்டமே 'மாறன்' படத்தின் திரைக்கதை.

இதை படித்தபோதே தெரிந்திருக்கும் எவ்வளவு பழைய கதை என்று. திரைக்கதை அதுக்கும் மேல. படத்தின் ஆரம்ப காட்சி, தனுஷின் அப்பா ராம்கி நேர்மையான பத்திரிகையாளர். ஒரு உண்மைச் சம்பவத்தை பத்திரிகையில் பிரசுரிக்கிறார். பின்னர் வீட்டுக்கு வருபவர் மகனிடம் நேர்மை குறித்து பாடம் எடுக்கிறார். இந்தக் காட்சியிலேயே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிடும். ஜெய் சங்கர் காலம் தொட்டு தமிழ் சினிமாவில் பத்திரிகையாளர் கதைகளில் எழுத்தப்பட்டுள்ள அதே சீன், ராம்கி கொல்லப்படுகிறார்.

அடுத்து தனுஷின் என்ட்ரிக்கு வருவோம், பாரில் நிதானம் தெரியாத அளவுக்கு ஃபுல் போதையில் இருக்கிறார் தனுஷ். எந்த அளவுக்கு என்றால், மண்டையில் பாட்டிலை உடைத்தும் ரியாக்ட் செய்யாத அளவு போதை. ஆனால், கீழே தள்ளிவிட்ட உடன் சுதாரித்துக் கொண்டு எதிரிகளை அடிக்கிறார். இதைக்கூட ஹீரோயிசத்துக்காக சேர்த்துக்கொண்டார்கள் என வைத்துக்கொள்வோம். ஒருகட்டத்தில் போலீஸ் உடன் மோதி, ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனுஷை மீட்க வரும் மாளவிகா மோகனன், 'அவன் யாரு தெரியுமா, ‘I will sue you’' என்று போலீஸைப் பார்த்தே சொல்லுகிறார்.

இதையெல்லாம் விட ஹைலைட். சமுத்திரக்கனியை விசாரிக்க செல்லும் காட்சி. முதலில் விசாரிக்க அனுமதி வேண்டும் என்று அனுமதி வாங்கிவிட்டு, அதை அப்படியே 'சர்ச் வாரண்ட்' எனச் சொல்லுகிறார்கள். அதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். போலீஸ் ரெய்டு போகிற இடத்தில் தனுஷும் கூடவே செல்கிறார். எந்த ஊரில் புகார் கொடுத்தவனை கூடவே போலீஸ் விசாரணைக்கு நேரில் அழைத்து செல்கிறது எனத் தெரியவில்லை. அதையும்கூட பொறுத்துக்கொள்வோம். 'சர்ச் வாரண்ட்' கொண்டுவரும் போலீஸ் இன்ஸ்பெக்டரை மந்திரியின் ஆட்கள்தான் உள்ளே விட மறுக்கிறார்கள் என்றால், காவலுக்கு இருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் கூட உயரதியாக வரும் இன்ஸ்பெக்டரை தடுக்கிறார்.

ஊடகங்கள் குறித்தும், அவர்கள் எப்படி ஊழலை அம்பலப்படுத்துவார்கள் என்பது குறித்தும் மிக மேலோட்டமாக எழுதப்பட்டுள்ளது. இறுதியில் ''நீங்க பாட்டுக்கு ஊழலை அம்பலப்படுத்துறேன்னு எதையாவது செய்வீங்க. அதனால நாங்க பாதிக்கப்படுறதா" என்று குற்றவாளியின் குற்றத்தை நியாயப்படுத்த முயன்றிருப்பது எல்லாம் எந்தமாதிரியான தர்க்கம் என்பது கார்த்திக் நரேனுக்கே வெளிச்சம்.

திரைக்கதையின் ஒரே ஆறுதல் படத்தின் சில டுவிஸ்ட்களை சீக்கிரமாகவே அவிழ்க்காமல் கடைசிவரை கொண்டுசென்றது. அதேபோல் படத்தின் இன்னொரு ஆறுதல் அண்ணன் - தங்கை பாசமும், அதில் தனுஷின் தங்கையாக நடித்துள்ள ஸ்மிருதி வெங்கட்டின் நடிப்பும்தான்.

தனுஷ் அலட்டாமல் தனது பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். அதில் அவரின் முந்தைய படங்களின் சாயலை தவிர்க்க முடியவில்லை. ஆனால், மாறன் பாத்திரம் வலுவில்லாமல் இருப்பதால் பார்வையாளர்கள் மனதில் ஒட்டவில்லை. நாயகி மாளவிகா மோகனன். மொத்தம் 10 காட்சிகள் என்றால், அதில் ஆறு காட்சிகள் பபுள்கம் மென்றுகொண்டு கடந்துவிடுகிறார். நடிக்க பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமுத்திரகனி, அமீர், ஆடுகளம் நரேன், இளவரசு என திறமையான நடிகர் பட்டாளம் நடித்திருக்கிறது. அவர்களின் யாரும் தங்களின் பாத்திரங்களில் மிளிர முடியாமல், மொத்தமாக சறுக்கியிருக்கிறது.

சமுத்திரகனி 'ரைட்டர்' படத்தில் வெளிப்படுத்திய நடிப்புக்கும், இந்தப் படத்தில் வெளிப்படுத்திய நடிப்புக்கும் எத்தனை வித்தியாசங்கள். நடிகர்களிடம் இருந்து திறமையான நடிப்பை வாங்கியிருந்தாலே திரைக்கதையின் குறைகள் மறைந்திருக்கும். ஆனால் கார்த்திக் நரேன் தனது போதாமையால் அதை செய்யவில்லையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பதுதான் புலப்படவில்லை.

இசை, ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதைக்கு ஏற்றது போல் தொய்வுகள் நிறைந்தே உள்ளது. 'பொல்லாத உலகம்' பாடலில் காட்டிய உழைப்பை பின்னணி இசையில் கோட்டைவிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

மொத்தத்தில் சரியான பொருட்கள், சரியான அளவு மற்றும் கலவையில் இருந்தும் ருசியாக சமைக்கப்படாத பண்டமே இந்த மாறன்.

ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் வரை தனது திறமையால் கோலோச்சி வரும் தனுஷ், அதற்கேற்ப கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினால் சிறப்பு. இது அவரின் பொறுப்பும்கூட. இனியேனும் அந்தப் பொறுப்பை கவனத்துடன் தனுஷ் செய்வார் என்று நம்புவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x