Last Updated : 11 Feb, 2022 04:12 PM

2  

Published : 11 Feb 2022 04:12 PM
Last Updated : 11 Feb 2022 04:12 PM

முதல் பார்வை | கடைசி விவசாயி - டெம்ப்ளேட்களில் சிக்காத நல்லனுபவம் தரும் நம்பிக்கைப் படைப்பு

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' வரிசையில் மணிகண்டனின் மற்றுமொரு சர்வதேச தரத்துக்கு இணையான நம்பிக்கை படைப்புதான் இந்த 'கடைசி விவசாயி'.

பல வருடங்களுக்குப் பிறகு குலதெய்வ வழிபாட்டை நடத்த நினைக்கும் கிராமம். குல தெய்வத்துக்கு படைப்பதற்காக நெல் விளைவிக்கும் கிராமத்தின் கடைசி விவசாயி மாயாண்டி எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், கிராமத்தின் குலதெய்வ வழிபாடு எப்படி நடக்கிறது என்பதே ’கடைசி விவசாயி’ படத்தின் ஒன்லைன். முதியவர் மாயாண்டி கதாபாத்திரம்தான் கதையின் மையம்.

படத்தின் மிகப்பெரிய பலம் கதையின் நாயகன் விவசாயி மாயாண்டி கேரக்டரில் நடித்துள்ள நல்லாண்டி. மின்சார வசதிகூட இல்லாத வீட்டில், நவீன வாழ்க்கை அண்டாத ஒரு தனி மனிதனாக படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். எந்தக் காட்சியிலும் அவர் மெனக்கெடுத்து நடிக்கவில்லை. விவசாயிக்கு ஏற்ற இயல்பிலேயே இருக்கிறார். அவர் மட்டுமல்ல, கதையின் மாந்தர்காளாக வரும் நிஜ கிராமத்து மக்களும் அப்படியே உள்ளார்கள். கிராமத்துக்கே உரிய பேச்சு வழக்கு, நையாண்டி என அனைவரும் புதுமுகங்கள் போல் இல்லாமல் கிராமங்களில் இருப்பதுபோலவே வாழ்ந்துள்ளனர்.

தன்னை கட்டிக்கொள்ள வேண்டிய முறைப்பெண் மறைவால் மனநிலை இழந்து சுற்றும் இளைஞன் கேரக்டர் விஜய்சேதுபதிக்கு. வித்தியாசமான பாத்திரமாக இது இருந்தாலும், கதையின் நகர்வுக்கு இந்த கேரக்டர் அவசியமா என தோன்ற வைக்கிறது. இதே எண்ணம் யோகி பாபுவின் கேரக்டரை பார்க்கும்போதும் தோன்ற வைக்கிறது. இருவருமே இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்துபோகின்றனர். ஒருவேளை வணிக நோக்கோடு இருவரையும் நடிக்க வைத்துள்ளார்களா என்பது தெரியவில்லை. எனினும், விஜய் சேதுபதி தனது என்ட்ரி சீனில் ’பில்கேட்ஸை ரயில் கேட்டில் பார்த்தேன்’ எனச் சொல்வதில் தொடங்கி சாமியாரிடம் திருநீர் வாங்குவது போன்ற காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் பங்களிப்பை செய்துள்ளார்.

’ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தை போல இதிலும், நீதிமன்ற காட்சிகளை எதார்த்தமாக கொண்டுவந்துள்ளார் மணிகண்டன். நீதிபதியாக வரும் ரேச்சல் ரெபேகாவுக்கு முக்கியக் கதாப்பாத்திரம். இன்னும் சில காட்சிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என தோணவைக்கிறது அவரின் பாத்திர வடிவமைப்பு. சந்தோஷ் நாராயணன், ரிச்சர்டு ஹாவேயின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசைக்கு இருவரும் தங்கள் உழைப்பை கொடுத்துள்ளது படத்தின் முதல் சீனில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

ஹைபிரிட் விதைகள், 100 நாள் வேலைத் திட்டம், ஆர்கானிக் விவசாயம் போன்றவற்றால் விவசாயம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தனது திரைக்கதையால் அசால்ட்டாக சொல்லி செல்கிறார் இயக்குநர் மணிகண்டன். ஒட்டுமொத்தமாக திரைக்கதை, இயக்கம், வசனம், ஒளிப்பதிவு என தனிமனிதனாக இந்தப் படைப்பை மணிகண்டன் செதுக்கியுள்ளார்.

மற்ற படங்களில் கிராமங்கள் என்றால் பசுமை வயல் என்று கட்டப்பட்டிருந்த கட்டமைப்பை உடைத்து மணிகண்டனின் கேமரா கண்கள் அச்சு அசல் கிராமத்தை கண்முன்கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் ஆனதாலோ என்னவோ, மணிகண்டனின் கேமரா வசீகரம் செய்கிறது. சில இடங்களில் வெளிப்படும் புரியாத வசனங்கள், காட்சித் தொய்வுகள் போன்ற தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய ஒரு சில பின்னடைவுகளைத் தாண்டி, 'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' வரிசையில் மணிகண்டனின் மற்றுமொரு சர்வதேச தரத்துக்கு இணையான நம்பிக்கை படைப்பு இந்த 'கடைசி விவசாயி'.

குறிப்பாக, ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை அனுபவபூர்வமாக எங்கேஜிங்காக திரைக்குள் நுழைத்துக்கொண்ட வகையிலும் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில், கார்ப்பரேட் வில்லன், அவரிடம் சிக்கி அல்லல்படும் விவசாயி, விவசாயிகளை காக்கும் நாயகன் என டெம்ப்ளேட் மாறாமல் விவசாயத்தை நெல் வயல்போல் தொழித்து எடுத்தார்கள். இதில் எந்த டெம்ப்ளேட்டுக்கும் சிக்காமல் விவசாயிகளின் வாழ்வியலையும், விவசாயம் எப்படி ஒரு விவசாயி வாழ்வில் கலந்திருக்கும் என்பதையும் மிக அழுத்தமாக, ஒரு நிஜ விவசாய ஊரில் வாழும் மனிதர்களை கொண்டு மணிகண்டன் கொடுத்திருக்கும் படைப்பே இந்த 'கடைசி விவசாயி'.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x