Published : 02 Feb 2022 01:29 PM
Last Updated : 02 Feb 2022 01:29 PM
"அரசியல் கட்சியில் இருக்கும் அடிப்படைத் தொண்டர்களைச் சுற்றி நடக்கும் கதைதான் ‘பப்ளிக்’. இது, அரசியலுக்குள் நடக்கும் அரசியலைப் பற்றிப் பேசும்." என்கிறார் ‘பப்ளிக்’ படத்தின் இயக்குநர் ரா.பரமன்.
சமுத்திரக்கனி, காளி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பப்ளிக்’. அறிமுக இயக்குநரான ரா.பரமன் இயக்கும் இப்படத்தை கேகேஆர் சினிமாஸ் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்க ராஜேஷ் யாதவ், வெற்றி இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களுக்கு பதில் சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத் என தலைவர்கள் படத்தை இடம்பெற செய்த இயக்குநர் ரா.பரமன், சமீபத்தில் வெளியான படத்தின் ஸ்னீக் பீக்கில் ஒருபடி மேலே சென்று “இந்தப் படத்தில் வரும் காட்சிகள் சம்பவங்கள் அனைத்துமே நிஜம். இங்கு நடந்ததைத்தான் சொல்லியிருக்கிறோம். யார் மனமாவது புண்பட்டால் நாங்கள் பொறுப்பு கிடையாது” என்று வசனம் வைத்து கவனம் ஈர்த்தார். படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரை தொடர்பு கொண்டு பேசினோம். அவருடன் உரையாடியதிலிருந்து...
திரைத்துறைக்கு வருகின்ற பத்திரிகையாளர் என்ற முறையில், திரைமொழியை எப்படி கற்றுக்கொண்டீர்கள்?
"ஒரு சமூகத்தை மற்றவர்கள் பார்ப்பதற்கும் ஒரு பத்திரிகையாளர் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஓர் அரசியல் நிகழ்வைக் கூட வெளியில் இருப்பவர்கள் பார்ப்பதற்கும், பத்திரிகையில் இருப்பவர்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வெளியில் இருப்பவர்களுக்கு அதன் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். ஆனால் பத்திரிகையாளர்கள் அதன் இரண்டு பக்கங்களையும் அறிவர். ஒரு பத்திரிகையாளர் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும். ஒரு நிகழ்வில் இருக்கும் அரசியல் என்ன, அது மக்களிடம் எப்படிப் போய் சேர்கிறது, அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது உள்ளிட்ட விஷயங்களை நாம் உணர்வதோடு மக்களுக்கும் அது என்ன மாதிரி உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் நடுவில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். எனவே, ஒரு பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்குள் நுழைவது எனக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அனுபவமாக நினைக்கிறேன்."
‘பப்ளிக்’ உருவான விதம் குறித்து?
"சில வருடங்களுக்கு முன் ஒரு பிரபல தொலைகாட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்தசமயத்தில் ஒரு கட்சியினுடைய அடிப்படை தொண்டர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் இருவரையுமே சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்படி சந்திக்கும்போது தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது, தலைவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதற்கான வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் தொண்டர்களை சந்தித்து, அவர்களுடன் பேசியதிலிருந்து ஏற்பட்ட தாக்கத்திலிருந்துதான் உருவானதுதான் ‘பப்ளிக்’"
‘பப்ளிக்’ வழக்கமான அரசியல் படங்களிலிருந்து எந்த வகையில் மாறுபடுகிறது?
"இது கட்சியில் இருக்கும் அடிப்படை தொண்டர்களை சுற்றி நடக்கும் கதை. கட்சியையும், கட்சியை சுற்றி நடக்கும் கதைகளே வழக்கமான அரசியல் படங்களில் இருக்கும். ஆனால் ‘பப்ளிக்’ அரசியலுக்குள் நடக்கும் அரசியலைப் பற்றிப் பேசுகிறது."
படத்தின் ஸ்னீக் பீக்கிலேயே மிகவும் காட்டமான அறிவிப்பை கொடுத்துள்ளீர்கள். சர்ச்சைகளைப் பற்றிய கவலை இல்லையா?
"எந்தப் படத்தையுமே நாம் கற்பனையாக எடுக்கவே முடியாது. கற்பனை என்று சொல்லக் கூடிய படங்களே கூட நேரடியாக மூளையில் உதித்து விடுவதில்லை. சமூகத்திலிருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை எடுத்துதான், அதை கற்பனையாக மாற்றி எடுக்க இயலும். அப்படி இருக்கும்போது அரசியல் படம் என்று சொல்லிவிட்டு, இது முழுக்க முழுக்க கற்பனையே என்று கூறினால், அது மக்களை ஏமாற்றுவது போலாகிவிடும். ஏதோ ஒரு நிகழ்விலிருந்துதான் நமக்கு சில யோசனைகள் உதித்திருக்கும். அரசியல் படமென்று வரும்போது நாம் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் கூட நாம் பார்த்து, கேட்ட, நம்மை பாதிக்கும் நிகழ்வுகளைத்தான் சினிமாவில் பதிவு செய்யமுடியும். இப்படத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களுமே ஏதோ ஒரு பாதிப்பிலிருந்து உருவானவைதான். நான் இல்லையென்று சொன்னாலும் கூட அதுதான் நிஜம். இப்படத்தில் நான் எந்தொவொரு கட்சியின் பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், அதையும் தாண்டி இதில் வரும் காட்சிகளுடன் மக்கள் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தால், அதில் உண்மை இருக்கிறது என்பதுதானே அர்த்தம்."
சமுத்திரகனியுடன் பணிபுரிந்த அனுபவம்?
"இந்தக் கதை உருவானதற்கு முக்கிய காரணமே சமுத்திரகனி தான். இப்படத்தில் அவருக்கு வசனங்கள் மிகவும் குறைவு. படத்தின் உருவாக்கத்தில் நிறைய யோசனைகளை கூறினார். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளமுடிந்தது."
இந்த கதைக்குள் காளி வெங்கட் வந்தது எப்படி?
"எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் யதார்த்தத்தை பிரதிபலிக்கக் கூடியவர் காளி. அவரிடம் எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அதற்குள் ஒரு யதார்த்தத்தை எப்படியாவது அவர் கொண்டுவந்துவிடுவார். இந்தக் கதைக்கு யதார்த்தமான ஒரு நடிகர் வேண்டும் என்று யோசித்த போதே காளி என் நினைவுக்கு வந்துவிட்டார். அதுமட்டுமின்றி இதுபோன்ற ஒரு கதையை தேர்ந்தெடுக்கும் துணிச்சல் சில நடிகர்களிடமே மட்டுமே இருக்கிறது. அதில் காளி வெங்கட்டும் ஒருவர்."
படம் ரிலீஸ் என்பது இந்த கரோனா சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
"பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கிய படங்கள் அனைத்தும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு திரையரங்குகளை ஆக்கிரமித்து விடும். அந்த இடைப்பட்ட காலங்களில் கூட ஒரு சிறிய இடைவெளி கிடைக்கலாம். அல்லது ஓடிடியாக கூட இருக்கலாம். படத்தின் ரிலீஸ் குறித்த விஷயங்களை இந்தக் காலகட்டத்தில் பெரிய படங்களே முடிவு செய்ய முடியாத சூழல்தான் உள்ளது. பொங்கல் நேரத்தில் ஒரு இடைவெளி இருந்தது. ஆனால், இன்னும் படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடியாததால், அந்த நேரத்தில் எங்களால் திரைக்கு கொண்டு வரமுடியவில்லை."
வித்தியாசமான முறையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களுக்கு பதில் ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் என பல்வேறு தலைவர்களை இடம்பெற செய்தீர்கள்... என்ன காரணம்?
"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முதலில் அந்தப் படங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற யோசனை உதித்தபோது எனக்கு அதைப் பற்றி தெளிவு முழுமையாக இல்லை. அறியப்படாத தலைவர்களின் படங்களை இடம்பெறச் செய்யவேண்டும் என்ற ஒரு மேம்போக்கான பார்வையுடன்தான் அதை நான் அணுகினேன். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி ஆய்வு செய்து தேடத் தேட நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. அந்த போஸ்டரை நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு ஒரு கருத்து தோன்றும். எனக்கு வேறு ஒரு கருத்து தோன்றும். நம்முடைய அரசியல் பார்வை அடிப்படையில் அந்த போஸ்டர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகளை சொல்லிக்கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இப்போது அதைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றும் ஒரு விஷயம், சில நாட்கள் கழித்து வேறு ஒன்றாக தோன்றலாம். ஒவ்வொருவரின் அரசியல் பார்வை அடிப்படையில் அவரவர்க்கு ஏற்ற கருத்துகளை அந்த போஸ்டர் சொல்கிறது என்பதே எனக்கு, பிறகுதான் தெரிந்தது. அதனால்தான் அந்த போஸ்டருக்கான ஒரு விளக்கமும் சரியானதாக இருக்காது என்று சொல்கிறேன்."
அந்த போஸ்டரில் பெரியார் படம் இடம்பெறாததற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் உள்ளதா?
"பெரியாரை வேண்டுமென்றே தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. இதே போஸ்டரில் பெரியாரை இடம்பெறச் செய்துவிட்டு அயோத்திதாசரையோ, ரெட்டைமலையாரையோ, சிங்காரவேலரையோ விட்டிருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது. ஏன் அயோத்திதாசரை படம் இல்லை என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். நாம் ஒருவரை மிகவும் கொண்டாடுகிறோம் என்பதற்காக அவரில்லாமல் எதுவுமே இல்லை என்ற ஒற்றை மனநிலைக்குள்ளும் நாம் போய்விடக் கூடாது. நாம் சிங்காரவேலரை எடுத்துக்கொண்டாலும் சரி, ரெட்டைமலையாரை எடுத்துக் கொண்டாலும் சரி, பெரியாருடைய கருத்தியலை அவருக்கு முன்பிருந்தே விதைத்துக் கொண்டே வந்தவர்கள் அவர்கள். அவர்கள் அதை சமப்படுத்தியதால்தான் பெரியாரால் அதை ஆழ்ந்து உழ முடிந்தது. நான் மட்டுமேதான் இது அனைத்தையும் செய்தேன் என்பதை பெரியாரே ஒப்புக் கொள்ளமாட்டார். இப்போது பலரும் பெரியார் படம் ஏன் இடம்பெறவில்லை என்று கேட்பதற்கு அந்த ஒற்றை மனநிலைதான் காரணம்."
பார்க்க > 'பப்ளிக்' படத்தின் ஸ்னீக் பீக்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT