Published : 08 Jan 2022 07:27 PM
Last Updated : 08 Jan 2022 07:27 PM

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்: வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு

நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் கூறியதாவது:

“நடிகர் சிலம்பரசனுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களைக் கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். அந்த வகையில் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருவரின் வயதும், அவரின் தொழிலும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.

நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி”

இவ்வாறு ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கவுரவ டாக்டர் பட்டத்தை வரும் ஜனவரி 11ஆம் தேதி அன்று சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x