Published : 31 Mar 2016 02:31 PM
Last Updated : 31 Mar 2016 02:31 PM

நான் முரட்டு ஆளுன்னா சிரிப்பாங்க!- மறுபக்கம் பகிரும் விசாரணை அஜய் கோஷ்

'விசாரணை' படத்தில் தனது இயல்பான நடிப்பாலும் டெரர் குரலாலும் மிரட்டியவர் அஜய் கோஷ். தொலைபேசியில் தொடர்புகொண்டு "சார்... எப்படி இருக்கிறீங்க" என்று நம்மிடம் நலம் விசாரித்துப் பேசினாலும், அந்த "ஒப்புக் கொண்டார்ர்ரா..." என்ற அதிரடி குரல் மட்டும் இன்னும் அடிவயிற்றை பிறட்டுகிறது. ஆனால், அவரிடம் பேசி முடித்த பிறகு, அவர் குறித்த பிம்பம் சுக்குநூறாக நொறுங்கிப் போனது. அந்த அளவுக்கு நிழலில் இருந்து நிஜத்தில் மாறுபட்ட அஜய் கோஷிடம் பேசியதில் இருந்து...

உங்களுடைய குடும்ப பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கள்..

ரொம்ப சாதாரணமான குடும்பம்தான். அப்பா ஆதிநாராயணா. சுதந்திர போராட்டத் தியாகி மட்டுமன்றி மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும் கூட. அதனால்தான் வங்காளப் போராளியான அஜய் கோஷ் பேரை எனக்கு வைத்தார். குடும்பத் தொழில் விவசாயம். அம்மா இப்போதும் விவசாயம் செய்கிறார். ரெண்டு தம்பிகளில் ஒருவர் விவசாயம், மற்றொருவர் ஹோட்டல் வியாபாரம் பண்ணுகிறார்.

உங்களுக்கு எப்படி சினிமா ஈடுபாடு வந்தது?

மாணவனாக இருக்கும்போதே எனக்கு சமூக ஈடுபாடு அதிகம். கம்யூனிஸ்ட் கட்சியின் கலைநிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துக்கிட்டேன். நான் யாரிடமும் நடிப்புக்கு பயிற்சி எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. தெலுங்கில் 'பிரஸ்தானம்' தான் என் முதல் படம். அப்புறம் சில படங்களில் நடித்தேன். ஒரு கட்டத்தில் போதுமான வாய்ப்புகள் இல்லாம ரொம்ப சோகமாக இருந்தேன். ஏனென்றால் நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டது கிடையாது.

அப்படின்னா, எப்படி அமைந்தது 'விசாரணை' வாய்ப்பு?

'ரன் ராஜா ரன்' தெலுங்கு படத்தில் நடித்தபோது எனக்கு நடிகர் சம்பத் சாருடைய மேலாளர் நல்ல பழக்கம். அவர்தான் இயக்குநர் வெற்றிமாறன் சார் அவருடைய படத்திற்காக நடிகர்கள் தேர்வு செய்துக் கொண்டிருக்கிறார் என்றார். உடனே சென்னை வந்து வெற்றிமாறன் சாரை சந்தித்தேன். சில நிமிடங்கள் பேசியவுடனே 'நீங்க இந்தப் படத்தில் நடிக்கிறீங்க' என்றார். படப்பிடிப்பு நடக்கும்போது ரொம்ப முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறோம் என்பது தெரிந்தது. விசாரணை படத்தைப் பார்த்து பலரும் பாராட்டினர். வெற்றிமாறன் சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

தமிழ் ரசிகர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியுமா?

அதை ஏன் கேக்குறீங்க... வடபழனியில் 'விசாரணை' படம் பார்த்துட்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் பலர் சூழ்ந்து கொண்டார்கள். அப்போது ஒருவர் என்னை அடிக்க வந்துவிட்டார். நல்ல வேளையா அங்கிருந்தவர்கள், "சினிமாவில்தான் வில்லனா நடித்திருக்கிறார். நிஜத்திலும் அப்படியா இருப்பார்?" என்று அவரை தடுத்தார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டது. இங்குதான் சினிமா வாழ்க்கையையும், நிஜ வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்காத ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரில்தான் ஒரு நடிகனுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உணர்ந்து தமிழில் கவனம் செலுத்தி வருகிறேன்.

வீட்டில் எப்படி ரியாக்ட் பண்ணினாங்க?

என் வீட்டில் என்னைப் பற்றி தெரியும் என்பதால் ஒன்றும் பெரிதாகச் சொல்லவில்லை. ஆனால், எங்க அப்பா இந்தப் படத்தைப் பார்க்கவில்லையே என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது. ஏனென்றால், இப்படத்தின் படப்பிடிப்பின்போது வரை உயிருடன் இருந்தார். இப்படத்தைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். ஆனால் வெளியாகும் முன்பு இறந்துவிட்ட்டார். அவர் மட்டும் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார்.

சரி, உண்மையச் சொல்லுங்க... வாய்ஸ் ரொம்ப டெரரா இருக்கே... அவ்வளவு விவரமான முரட்டு ஆளா நீங்க?

உண்மையில் நான் ரொம்ப சாந்தமான ஆளுங்க. படப்பிடிப்பின்போது தினேஷை தென்னை மட்டையில் அடிச்சுக்கிறப்போ அவர் அப்படியே தாங்கி நின்றுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை அடித்தவுடனும் நான் தினேஷை கட்டுப்பிடித்து அழுதுவிடுவேன். அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது இரவெல்லாம் தூக்கம் வராமல், சாப்பிட முடியாமல் தவித்தேன். என்னை முரட்டு ஆள்னு சொன்னா எனக்கு தெரிஞ்சவங்க சிரிச்சிடுவாங்க.

அப்புறம் என்ன சொன்னீங்க... விவரமான ஆளா? ஆரம்பத்துல விசாரணை எந்த மாதிரியான படம், அதோட இயக்குநர் எப்படிப்பட்டவர்னு எதுவுமே தெரியாது. ஒருநாள் என் மூத்த மகன் வந்து, 'வெற்றிமாறன் எவ்வளவு பெரிய இயக்குநர் தெரியுமா?' என்று அவருடைய படங்களைப் பற்றி சொன்னான். அப்போதுதான் உண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பதே எனக்கு தெரிந்தது.

'விசாரணை'க்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் ரொம்ப கவனிக்கப்பட்டிருக்கு. நிறைய வாய்ப்பு தானா வரும்னு நான் பாட்டுக்கு வீட்ல காத்திட்டுக்கு இருக்கேன். ஆனா, ஒரு நடிகர்னா மேனேஜர்லாம் வேணும்னு சொல்றாங்க. எனக்கு சினிமா துறையில் பெருசா தொடர்புகள் இல்லை. சினிமா வாய்ப்புக்கு என்ன செய்றதுன்னு கூட இன்னமும் முழுசா தெரியாத என்னைப் பார்த்து விவரம்னு சொல்லிட்டீங்களே...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x