Published : 11 Mar 2016 05:13 PM
Last Updated : 11 Mar 2016 05:13 PM
'சூதுகவ்வும்' நலன் குமரசாமி இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம், மீண்டும் நலன் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படம், 'பிரேமம்' மலையாளப் படத்தில் செலினாக நடித்த மடோனா செபாஸ்டியன் தமிழில்அறிமுகமாகும் படம் என்ற இந்த காரணங்களே 'காதலும் கடந்து போகும்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
நலன் குமாரசாமியின் படம் என்பதால் படத்தின் மீதான அபரிமிதமான நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
படம் எப்படி?
அடியாளாக இருக்கும் விஜய் சேதுபதி பார் உரிமையாளராக ஆசைப்படுகிறார். படிப்பு முடிந்த மடோனா ஐ.டி.யில் வேலை பார்க்க விரும்புகிறார். இவர்கள் இருவரின் நோக்கங்கள் நிறைவேறியதா? எப்படி சந்திக்கிறார்கள்? அவர்களுக்குள் உருவாகும் உறவு என்ன? இறுதியில் என்ன ஆகிறார்கள் என்பது மீதிக் கதை.
சினிமாவின் மூத்த தலைமுறையில் இருந்து தற்போதைய தலைமுறை வரை எந்த கூச்சமும் இல்லாமல் வேறு மொழி படத்தை காப்பி அடிப்பது, எடுத்தாள்வது, ரைட்ஸ் வாங்காமல் சுடுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் சகஜமாகிவிட்டது.
இந்த சூழலில், 'மை டியர் டெஸ்பரடோ' என்னும் கொரியன் படத்தின் உரிமையை ரூ.40 லட்சத்துக்கு வாங்கி அதை தமிழ் சூழலுக்கேற்ப மறு ஆக்கம் செய்த இயக்குநர் நலன் குமரசாமியின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஆனால், நலன் சார் உங்களிடம் இருந்து ரசிகர்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள்...
வழக்கமும், பழக்கமுமான ரவுடி கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். நடை, உடை, பாவனை, உடல் மொழி, ஃபெர்பாமன்ஸ் எல்லாவற்றிலும் விஜய் சேதுபதி சரியாகப் பொருந்துகிறார். படத்தை தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார்.
ஆனால், விஜய் சேதுபதி இன்னும் இதுபோன்ற டெம்ப்ளேட் ரவுடி கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்காது.
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நானும் ரவுடிதான்' படங்களில் நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இயல்பாக ஈர்த்தது. காதலும் கடந்துபோகும் படத்திலும் அதே மாதிரி கதாபாத்திரத்தை கொஞ்சம் தூசு தட்டி, பட்டி டிங்கரிங் செய்திருப்பதால் இவரும் இப்படி ஆகிட்டாரே என்று ரசிகர்கள் தியேட்டரில் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்கள். இனியாவது இந்த சிரிப்பு ரவுடி கதாபாத்திரத்துக்கு குட்பை சொல்லுங்க சேதுபதி!
மடோனா செபாஸ்டியனுக்கு ஸ்கோர் செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தனை வாய்ப்புகளையும் மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதியுடனான மோதல் - நட்பு படலத்தில் கவனிக்க வைக்கிறார்.
சமுத்திரக்கனி வழக்கம் போல வந்து போகிறார்.
விஜய் சேதுபதியின் அந்த இன்டர்வியூ போர்ஷன் அதகளம். நலன் குமரசாமியின் வசனங்கள் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. சிரிக்க வைக்கிறது.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்குப் பெரும் பலம். மோகன்ராஜன் வரிகளில் கககபோ பாடல் ரசிக்க வைக்கிறது. லியோ ஜான் பால் படத்தின் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
நல்ல கதை, தரமான ஒளிப்பதிவு, கலக்கல் இசை என்று எல்லாமே வைத்துக்கொண்டு மேக்கிங்கில் அசத்திய நலன் குமரசாமி திரைக்கதையில் மட்டும் ஏன் எந்த சுவாரஸ்யமும், அழுத்தமும், பலமும் இல்லாமல் மேலோட்டமாக வடிவமைத்திருக்கிறார்? என்ற கேள்வி எழுகிறது.
மடோனா தன் பெற்றோரை கன்வின்ஸ் பண்ண முடியாமல் அடுத்தடுத்து பொய்களை அடுக்குவதும், நாடகம் ஆடுவதும் நம்பும் படி இல்லை. சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் பலவீனம்.
ரொமான்டிக் காமெடி டிராமா ஜானரில் காட்சிகள் மெதுமெதுவாக நகர்வதை குறையாக சொல்ல முடியாது. ஆனால், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்.
40 லட்சம் கொடுத்து ரீமேக் உரிமை வாங்கிய நலன் சில லட்சம் கொடுத்து தமிழ் திரைக்கதை ஆசிரியர்களையோ, எழுத்தாளர்களையோ பயன்படுத்தி இருக்கலாம். அல்லது சொந்தமாக திரைக்கதை எழுதி இருக்கலாம்.
ஆனாலும், காதலும் கடந்து போகும் என்று தலைப்பு வைத்துவிட்டு காதலைப் பற்றி நெக்குருகி படம் எடுக்காமல் இயல்பாக எடுத்த விதத்தில் காதலும் கடந்து போகும் நம் நினைவுகளில் நடந்து போகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT