Published : 22 Jun 2014 03:23 PM Last Updated : 22 Jun 2014 03:23 PM
எனக்கு ஒவ்வொரு வருடமும் ஃபிலிம்ஃபேர் வேண்டும்: நடிகர் தனுஷ்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் அமைப்பினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் தனுஷ், ஃபிலிம்ஃபேர் தலைமைச் செயல் அதிகாரி தருண் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாகப் பேசிய தருண் ராய், இம்முறை 607 திரைப்படங்கள் 21 வகையான பிரிவுகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார். ஃபிலிம்ஃபேர் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, எங்களுக்கும் தென்னிந்திய சினிமாவிற்கும் இது மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், "ஃபிலிம்பேர் எனக்கு ஒரு கனவைப் போல. எனக்கு மட்டுமல்ல பல நடிகர்களின் கனவு இது. 2002-ஆம் வருடம் நான் நடிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஃபிலிம்பேர் விருதை வெல்ல நினைத்தேன். ஆனால் தொடர்ந்து நான் நினைத்தது நிறைவேறாமல் போனது" என்று கூறினார்.
புதுப்பேட்டை, அது ஒரு கனாக்காலம் போன்ற திரைப்படங்களுக்கு எனக்கு விருது கொடுக்க பரிசீலித்திருக்கலாம் என நகைச்சுவையாகக் குறிப்பிட்ட தனுஷ், "கடைசியாக ஆடுகளம் படத்திற்கு எனக்கு ஃபிலிம்பேர் கிடைத்தது. தொடர்ந்து அடுத்த வருடம் 3 திரைப்படத்திற்கும் கிடைத்தது" என்றார்.
நடிப்பு மற்றும் விருதுகள் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ், "நல்ல நடிப்பு மட்டுமே போதாது. திரையில் நாம் நாமாகத் தெரியவில்லை என்றாலே அது பெரிய வெற்றி. இயக்குனரின் பார்வையை நாம் எவ்வளவு தூரம் நடிப்பில் கொண்டு வருகிறோம் என்பதும் முக்கியம். விருதுகளைப் பொருத்த வரை எனக்கு எல்லா விருதுகளுமே முக்கியம் தான். அதிலும் ஃபிலிம்ஃபேர் விருதில் எனக்குப் பேராசையே உள்ளது. எனக்கு ஒவ்வொரு வருடமும் ஃபிலிம்ஃபேர் கிடைக்க வேண்டும் என்றே ஆசைப்படுவேன்"
இவ்வாறு தனுஷ் கூறினார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா, வரும் ஜூலை மாதம் 21-ஆம் தேதி, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
WRITE A COMMENT