Published : 15 Dec 2021 03:15 PM
Last Updated : 15 Dec 2021 03:15 PM

சாதியக் குறியீடுகள் இருக்காது; டைட்டிலை மாற்றும் எண்ணம் இல்லை: ‘கள்ளன்’ இயக்குநர் விளக்கம்

‘கள்ளன்’ படத்தின் டைட்டில் சர்ச்சை குறித்து இயக்குநர் சந்திரா தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. இப்படத்தை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நிகிதா, வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், செளந்தர்ராஜா, தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன், அருண், மாயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் டைட்டிலுக்குப் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதுகுறித்து நேற்று (டிச.14) நடந்த டீஸர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சந்திரா தங்கராஜ் பேசியதாவது:

''இந்தக் கதைக்கு இப்படியொரு டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் வைத்தோம். இது எந்த சாதியையும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமல்ல. இது ஒரு ஆக்ஷன் க்ரைம் படம். வேட்டைச் சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன், இனிமேல் வேட்டையாடக் கூடாது என்று தடை போட்ட பிறகு வறுமையின் காரணமாக வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுகிறான்.

வேட்டைச் சமூகம் என்பது எல்லா ஊரிலும், நாட்டிலும் இருக்கக் கூடியதுதான். நான் பார்த்த ஒரு வாழ்க்கையை நெருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக மட்டும் இன்றி, நல்ல கருத்தை மக்களுக்குச் சொல்லும் ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும்.

இதில் எந்த இடத்திலும் சாதியக் குறியீடோ, வசனமோ இருக்காது. யாருடைய மிரட்டலுக்கும் பயந்து டைட்டிலை மாற்றுகிற எண்ணம் இல்லை. இந்த விளக்கத்தை எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கூறிவிட்டோம். அதையும் தாண்டி எதிர்ப்பவர்கள் படத்தைப் பார்த்த பிறகு நிச்சயம் எதிர்க்க மாட்டார்கள். அதேசமயம், நீதிமன்றமோ அல்லது தணிக்கைக் குழுவோ இந்த தலைப்பை மாற்றச் சொன்னால், நிச்சயம் வேறு ஒரு தலைப்பு வைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். மற்றபடி, வேறு யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்''.

இவ்வாறு இயக்குநர் சந்திரா தங்கராஜ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x