Published : 09 Dec 2021 04:30 PM
Last Updated : 09 Dec 2021 04:30 PM
வேலைக்குச் செல்லாமல் சிறு சிறு குற்றங்களைச் செய்து விட்டேத்தியாகச் சுற்றிக் கொண்டிருப்பவர் கர்ணா (ஜி.வி.பிரகாஷ்). அவரது நண்பரான ராக்கி (நந்தன் ராம்) கஞ்சா விற்பனை செய்து வருகிறார். சிறு வயதுல் சாக்லேட் திருடியதற்காக சிறார் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்து விட்டு ரிலீஸாகும் இன்னொரு நண்பரான கலை (பசங்க பாண்டி) சராசரி வாழ்க்கை வாழ நினைக்கிறார். இந்த மூன்று நண்பர்களைச் சுற்றி நடக்கும் அடுத்ததடுத்த சம்பவங்கள் நமக்குக் காட்டப்படுகின்றன.
காவேரி நகர் மக்களுக்கு அனைவரும் வேலை கொடுக்கத் தயங்குகின்றனர். இதனால் வேறு ஒரு ஏரியாவின் பேரைச் சொல்லி பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச் சேர்கிறார் கலை. காவேரி நகர் இளைஞர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு வரும் போலீஸ்காரரான ரவிமரியா கொடுக்கும் ஒரு வேலையைச் செய்கிறார் ராக்கி. இதனால் ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மூன்று நண்பர்களின் வாழ்க்கையும் மாறுகின்றன. இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘ஜெயில்’.
படத்தின் தொடக்கத்தில் சென்னையின் பூர்வகுடிகளின் இடப்பெயர்வு குறித்தும் அதனால் அவர்கள் அடையும் பாதிப்பு குறித்தும் நமக்கு வாய்ஸ் ஓவரில் விளக்கப்படுகிறது. படம் இதைப் பற்றித்தான் பேசப்போகிறது என்று நாம் எதிர்பார்த்து உட்கார்ந்தால் அடுத்தடுத்த காட்சிகளிலேயே நமக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. படத்தின் டைட்டிலில் தொடங்கும் வாய்ஸ் ஓவர் ஏறக்குறைய படத்தின் ஒரு மணி நேரம் வரை வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திர அறிமுகத்துக்கும் வாய்ஸ் ஓவரில் அதன் பின்னணி சொல்லப்படுவது ஏன் என்று புரியவில்லை. ஏனெனில் முதல் பாதி முழுக்கவே படத்தின் பிரதான கதாபாத்திரங்களைச் சுற்றித்தான் கதை நிகழ்கிறது எனும்போது அவற்றின் பின்னணியை வாய்ஸ் ஓவரில் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் வேண்டாத வேலை.
ஏறக்குறைய படமே இடைவேளைக்குச் சற்று முன்னால்தான் தொடங்குகிறது என்று சொல்லலாம். அதற்கு முன்பு வரை அம்மா சென்டிமென்ட், நண்பன் செண்டிமென்ட், அக்கா செண்டிமென்ட் காட்சிகளால் முதல் பாதி நிரம்பி வழிகிறது. இடையிடையே வரும் ஜிவி.பிரகாஷ் - அபர்ணதி காதல் காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படி இயல்பாக இருக்கின்றன. வெறும் காட்சிகளாலேயே கடத்தியிருக்க வேண்டிய உணர்வைப் பல காட்சிகளில் வசனங்களாகத் திணிக்க முயன்றுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இதனால் நமக்கு ஏற்பட வேண்டிய தாக்கம் நீர்த்துப் போய்விடுகிறது.
படத்தின் பெரும்பலமாக ஜி.வி.பிரகாஷைச் சொல்லலாம். ‘நாச்சியார்’, ‘சர்வம் தாள மயம்’ போன்ற படங்களில் தனக்கு நடிக்கவும் வரும் என்று காட்டியவர் ‘பேச்சிலர்’ மற்றும் இந்த படத்தில் ஒரு முழுமையான நடிகராகத் தேறியிருக்கிறார். கோபம், அழுகை, காதல், நகைச்சுவை எனப் படம் முழுக்க ஸ்கோர் செய்து அப்ளாஸ் பெறுகிறார்.
நாயகி ரோசாமலராக அபர்ணதி. படத்தில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய வேலை எதுவும் இல்லையென்றாலும் தன்னுடைய இயல்பான, குறிப்பிடத்தக்க நடிப்பால் கவர்கிறார்.
இவர்கள் தவிர ராதிகா, ரவிமரியா, நந்தன் ராம், பசங்க பாண்டி என எந்தக் கதாபாத்திரத்தின் பின்னணியும் ஆழமாகப் பார்வையாளர்களுக்குச் சொல்லப்படவில்லை. எனினும் நடிப்பில் குறைசொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் தங்கள் நடிப்பை வழங்கியுள்ளனர்.
இரண்டாம் பாதியில் தொடங்கும் கதையாவது விறுவிறுப்பாகச் செல்கிறதா என்றால் அதிலும் ஏமாற்றமே. ஒரு நண்பர் இறக்க, மற்றொரு நண்பர் சிறையில் இருக்கிறார். அடுத்த காட்சியிலேயே நாயகனும் நாயகிக்கும் ஒரு டூயட் வருகிறது. இது உண்மையில் ‘வெயில்’ ‘அங்காடித் தெரு’ இயக்கிய வசந்தபாலனின் படம்தானா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எங்கெங்கோ சுற்றி ஏதேதோ செய்து கடமைக்கு க்ளைமாக்ஸை முடித்தது போல இருக்கிறது.
படம் நடக்கும் கதைக்களத்துக்கு ஏற்ற இயல்பான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார் கணேஷ் சந்திரா. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் குறையொன்றும் இல்லை. பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், அனைத்துப் பாடல்களும் தேவையற்ற இடங்களில் வந்து படத்தின் வேகத்தைக் குறைக்கும் காரணிகளாகின்றன. அன்பறிவின் சண்டைப் பயிற்சியில் சண்டைக் காட்சிகள் நேர்த்தியுடன் படமாக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்கொண்ட கதைக்களத்தை நேரடியாகச் சொல்லாமல் அதற்குத் தொடர்பே இல்லாத காட்சிகளினால் பார்வையாளர்களுக்கு இரண்டு மணி நேர தண்டனையாக அமைந்துள்ளது இந்த ‘ஜெயில்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT