Published : 03 Dec 2021 08:00 PM
Last Updated : 03 Dec 2021 08:00 PM
கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நண்பர்களைப் பார்க்க வருகிறார் நாயகன் டார்லிங் (ஜி.வி.பிரகாஷ்). யார் எது சொன்னாலும் தான் செய்வதை மட்டுமே செய்யும் ஒரு இளைஞன். நண்பர்களின் ஐடி அலுவலகத்திலேயே வேலைக்குச் சேரும் அவருக்கு நண்பனின் தோழியான சுப்பு (திவ்யபாரதி) மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. சுப்புவின் தோழி வெளிநாடு செல்லவே தோழியின் காதலனான தனது நண்பரின் பரிந்துரையின் பேரில் சுப்புவின் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறார் நாயகன்.
ஆரம்பத்தில் நாயகன் மீது ஈடுபாடின்றி இருக்கும் சுப்புவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் இரண்டறக் கலந்து விடுகிறார்கள். இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் சுப்பு, தான் கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். இதனை நாயகனிடம் தெரிவிக்கும்போது அதிர்ச்சி அடையும் அவர், கர்ப்பத்தைக் கலைக்குமாறு சுப்புவை வற்புறுத்துகிறார். தன் வயிற்றில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் என்பதால் அதனைக் கலைக்கத் தயங்கும் சுப்பு திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கிறார். இருவருக்குமிடையே பிரிவு ஏற்படுகிறது. இதன் பிறகு என்னவானது என்பதே ‘பேச்சிலர்’ சொல்லும் கதை.
நாயகனாக ஜி.வி.பிரகாஷ். முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் பெரிதும் முன்னேறியிருக்கிறார். கோபம், விரக்தி, இயலாமை என அனைத்து உணர்வுகளையும் அநாயசமாக வெளிக்காட்டி ஸ்கோர் செய்கிறார்.
நாயகியாக புதுமுகம் திவ்யபாரதியும் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இவர்கள் தவிர்த்து ‘பக்ஸ்’ பகவதி பெருமாள், நக்கலைட்ஸ் அருண்குமார், தனம் என படத்தில் துணைக் கதாபாத்திரங்களாக வரும் அனைவருமே எந்தவித மிகையும் இன்றி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இரண்டாம் பாதியில் வரும் முனிஷ்காந்த், ஒரே ஒரு காட்சியில் வரும் மிஷ்கின் என அனைவரும் கொடுத்த வேலையை நிறைவாகச் செய்துள்ளனர்.
படம் தொடங்கியது முதல் இறுதி வரை சினிமா பார்ப்பது போன்ற உணர்வே இல்லாமல் படு இயல்பாகக் காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்தின் பெரிய ப்ளஸ். கதாபாத்திரங்களின் இயல்பான கொங்கு தமிழ் அதற்குப் பெருமளவில் கைகொடுத்துள்ளது. நண்பர்களின் ரூமில் நடக்கும் உரையாடல்கள், இரண்டாம் பாதியில் வரும் கோர்ட் சீன், இப்படிப் பல காட்சிகள் படு இயல்பாக எடுக்கப்பட்டுள்ளன.
இப்படி பல ப்ளஸ்கள் படத்தில் இருந்தும் படத்தின் திரைக்கதையின் சொதப்பலால் மற்ற விஷயங்கள் எதுவும் எடுபடாமல் போகின்றன. முதலில் நாயகன் ஜி.வி.பிரகாஷின் இயல்புதான் என்ன? நண்பனின் வயிற்றில் பீர் பாட்டில் குத்தி ரத்தம் வரும்போது இப்படி யாராவது உட்கார்ந்து பிரியாணியை எடுத்துப் போட்டுச் சாப்பிடுவார்களா? இல்லை அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பு என்று சப்பைக் கட்டு கட்டினாலும் அதற்கான பின்னணி தெளிவாகச் சொல்லப்படாததால் அதோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. நாயகனின் பாத்திரப் படைப்பில் ‘அர்ஜுன் ரெட்டியின்’ நெடி சற்று தூக்கலாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இயக்குநர் சதீஷ் செல்வகுமாருக்கு மலையாளப் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனவோ என்னவோ.. ‘அங்கமாலி டைரீஸ்’, ‘இஷ்க்’ போன்ற படங்களின் சாயல் பல இடங்களில் வருகிறது.
காட்சிகள்தான் மலையாளப் படங்களை ஞாபகப்படுத்துகின்றன என்றால் பின்னணி இசையும் பாடல்களும் கூட அப்பட்டமாக மலையாளப் படங்களின் தாக்கத்தில் இருக்கின்றன. படத்தில் வரும் முதல் பாடல் ‘அங்காமலி டைரீஸ்’ படத்தில் முதல் பாடலைப் போலவே இருக்கிறது. முதல் பாதியில் ஜி.வி.பிரகாஷின் ஸ்லோமோஷன் காட்சிகளில் வரும் பிஜிஎம் ‘அர்ஜுன் ரெட்டி’ தீம் இசையை நகலெடுத்தது போலவே இருக்கிறது. இன்றைய இணைய உலகில் இசையமைப்பாளர் சித்து குமார் சற்றே கவனமுடன் இருந்திருக்கலாம்.
படத்தின் கதையாக முதல் பத்தியில் இங்கே சொன்னதைத்தான் ஜவ்வாக இழுத்து முதல் பாதியாக இன்டெர்வெல் வரை கொடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் கதையோட்டத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத காட்சிகள் முதல் பாதி முழுக்க நிரம்பி வழிகின்றன. காய்ச்சலில் கிடக்கும் தன்னை நாயகன் கவனித்துக் கொள்வதால் அவர் மீது நாயகிக்கு ஈர்ப்பு வருவதெல்லாம் பாகவதர் கால டெக்னிக். கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம். அதேபோல நாயகனின் நண்பர்கள் அலுவலகத்தில் எந்த வேலையும் செய்யாமல் நாயகனுடனே சுற்றிக் கொண்டிருப்பதெல்லாம் நம்பும்படி இல்லை.
இரண்டாம் பாதி தொடங்கி ஒரு அரை மணி நேரம் ஒரு அட்டகாசமான கோர்ட் ரூம் டிராமா போல விறுவிறுப்பாகச் சென்று நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்யும் திரைக்கதை அடுத்தடுத்த காட்சிகளில் மீண்டும் தொய்வடைந்து விடுகிறது. படத்தைத் தாங்கிப் பிடிப்பது ஆங்காங்கே வரும் நகைச்சுவை வசனங்கள்தான். மெடிக்கல் காட்சி, அக்காவிடம் வீடியோ கால் பேசுவது எனப் படம் முழுக்க குபீர் சிரிப்பை வரவழைக்கும் நல்ல காமெடி காட்சிகள் உள்ளன. ஆனால், தொய்வான திரைக்கதையால் அவை நினைவில் தங்காமல் போய்விடுகின்றன.
படத்தில் மிஷ்கின் வரும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் ரகம். க்ளைமாக்ஸ் காட்சி படத்துக்குத் தொடர்பே இல்லாமல் இருக்கிறது.
ஒரு குறும்படமாக எடுத்திருந்தால் சிறப்பாக வந்திருக்க வேண்டிய கதையை மூன்று மணி நேரம் வளவள என்ற இழுத்து எங்கெங்கோ போய் ஏதேதோ செய்து ஒரு வழியாக முடித்திருக்கிறார் இயக்குநர். இயல்பான நடிப்புக்காகவும், ஆங்காங்கே வரும் சில நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம் ‘பேச்சிலர்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT