Published : 29 Nov 2021 04:01 PM
Last Updated : 29 Nov 2021 04:01 PM

இழப்பிற்கு வார்த்தைகள் சமமாகாது: சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு சுப்ரமணியம் சிவா இரங்கல்

சிவசங்கர் மாஸ்டர் மறைவு குறித்து இயக்குநர் சுப்ரமணியம் சிவா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சிவசங்கர். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலின் நடன வடிவமைப்புக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (நவ.28) சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநர் சுப்ரமணியம் சிவா தனது முகநூல் பக்கத்தில் சிவசங்கர் மாஸ்டர் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

''பாடம் சொல்லிக் கொடுத்த மாஸ்டர்..

மாஸ்டரை,
நான் சந்திக்கும் போது
ஒரு பாடல் மட்டும் ஷூட்டிங் பண்ண வேண்டி இருந்தது.
படம் நன்றாக இருக்கிறது, அந்தப் பாடல் படத்தில் தேவையா என்ற டிஸ்கஸ்ஸும் போய்க்கொண்டிருந்தது.
நான் மட்டும் அந்தப் பாடல் இருந்தால்தான் அப்பெண்ணின் காதல்
முழுமை பெறும் எனப் பிடிவாதமாக இருந்தேன்,
இது கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது.
இச்சமயத்தில் தான் 10 நாட்களுக்கு ஒருமுறை சிவசங்கர் மாஸ்டர்,
எனக்கு முதல் படம் தந்த
கிருஷ்னகாந்த் சார்
அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்திப்பார்,
ஒரு நாள் மாஸ்டரிடம்,
நீங்கள் பெரிய மாஸ்டர்
நீங்கள் அடிக்கடி வாய்ப்புக்காக,
என்னைச் சந்திப்பது எனக்கு
தர்மசங்கடமாக இருக்கு மாஸ்டர்,
அந்தப் பாடல் எடுப்பதாக
முடிவு செய்யும் பச்சத்தில்
உங்களை அழைக்கிறேன்
என நான் சொன்னதும்,
மாஸ்டர் சொன்னார்,
ராஜா...
ஒருவர் யாரிடமும் கடன் கேட்டுதான் போகக்கூடாது,
வாய்ப்பு கேட்டு வருபவர்களை வரவேண்டாம் எனச் சொல்லாதீர்கள்,
நான் வருகிறேன்.
உங்களுக்கு வேலை இருந்தால்,
உங்கள் உதவியாளரிடம் வேலையில் இருப்பதாகத் தெரிவித்தால்
நான் அடுத்தமுறை வந்து சந்திப்பேன்.
என்னை வர வேண்டாம் என மட்டும் சொல்லாதே ராஜா...
ஒரு கலைஞன் வேலை செய்ய வேண்டும். இல்லாதபோது
வாய்ப்பு தேடத்தானே வேண்டும் என
அவர் சொன்னது,
எனக்கு மிகப் பெரிய பாடமாகவே அமைந்தது,
அன்று முதல் வாய்ப்பு தேடி வருபவர்களை நான் முடிந்தவரை சந்தித்து விடுவேன்,
அதன் பிறகு அந்தப் பாடலுக்கு
அவர்தான் நடனம் அமைத்தார்,
அந்தப் பாடல் தான் மன்மத ராசா...
அந்தப் பாடல்
'திருடா திருடி' படத்தை வெற்றியின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது,
மேலும் தம்பி தனுஷ், சாயாசிங் அதிவேக நடனம் அனைவரையும் பேச வைத்தது,
சேனல்களில் அதிகம் ஒளிபரப்பிய பாடலாகவும் இடம் பிடித்தது,
இசை அமைத்த தினா சார்,
ஒளிப்பதிவு செய்த ரமேஷ்G
அப்பாடலை எழுதிய நண்பர் யுகபாரதிக்கும் மேலும் புகழைப் பெற்றுத் தந்தது, பிறகு,
மாஸ்டருடன் 'தொங்கா தொங்கதி' (தெலுங்கு திருடா திருடி), 'பொறி', 'சீடன்' படங்களில் இணைந்து பணிபுரிந்ததும் மறக்க
முடியாதது.
தற்போது அவர் படங்களில் நடிகராகப் பார்த்த போதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது,
ஆனால்,
அவர் இனி இல்லை,
இழப்பிற்கு வார்த்தைகள்
சமமாகாது,
மீண்டு வருவார் என்று தான் நினைத்தேன்,
காலம் கருணை இல்லாதது...
காலத்திற்கு சென்டிமென்ட் கிடையாது,
பிறக்கும் போது மறைவும் நிச்சயம் என்பதே இயற்கை விதி,
ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்,

சாதித்தே மறைந்தார் மாஸ்டர்,
அவர் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறேன்...
மாஸ்டரைப் பிரிந்து
வாடும் மாஸ்டரின் செல்லப் பிள்ளைகள் தம்பி விஜய், தம்பி அஜய் மற்றும் குடும்பத்தார்கள் துயரிலிருந்து மீண்டு வர இயற்கையும், இறைவனும் அவர்களுக்கு துணை இருக்கட்டும்..

..மாஸ்டர் சிவசங்கரை வணங்குகிறேன்...

நன்றி''.

இவ்வாறு சுப்ரமணியம் சிவா முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x