Published : 21 Nov 2021 08:35 AM
Last Updated : 21 Nov 2021 08:35 AM
புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கவுதம் (சதீஷ் குமார்). மனக்கசப்பால் தன்னை விட்டுப் பிரிந்துச் சென்ற தனது மனைவி நிஷாவோடு (மிர்னாலினி ரவி) மீண்டும் சேர முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் பூமியை நோக்கி ஒரு எரிகல் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அந்த எரிகல் விழும் இடத்தில் சிக்கிக் கொள்ளும் நாயகன் மறுநாள் கண்விழிக்கும் போது முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள் மீண்டும் நடக்கின்றன.
குழப்பத்தில் தவிக்கும் நாயகனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அன்றைய நாள் முடியும் நேரத்தில் தனது மனைவியை யாரோ ஒரு மர்ம நபர் சுட்டுக் கொள்கிறார். எத்தனை முறை தடுத்தாலும் இதே நிகழ்வு மீண்டும் மீண்டும் நடக்கிறது. எதனால் அந்த நாள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது? அவரது மனைவியைக் கொல்வது யார்? என்ற கேள்விகளுக்கான விடையைச் சொல்கிறது ‘ஜாங்கோ’.
இந்தியாவின் முதல் டைம் லூப் திரைப்படம் என்ற வாசகங்களோடு விளம்பரப்படுத்தப்பட்டு சயின்ஸ் ஃபிக்ஷன் பட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோடு வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்றால் அதற்கு இல்லை என்பதே பதிலாக சொல்ல வேண்டும்.
டைம் லூப் படங்களில் இருக்கும் பொதுவான கரு, படத்தின் நாயகனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நாள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். தினமும் அதே நாளின் சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டே இருக்கும். அவரை சுற்றி இருக்கும் மக்களும் முந்தைய நாள் செய்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் செய்வார்கள். நாயகன் மட்டும் டைம் லூப்பில் தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்து, அதற்கான காரணங்களை கண்டறிந்து அந்த சுழற்சியில் இருந்து வெளியே வருவார். இதை அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வந்துவிட்டன. இந்திய சினிமாவுக்கு புதிதான இந்த கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் மனோ கார்த்திகேயனை பாராட்டலாம்.
ஆனால் எடுத்துக் கொண்ட கதைக்களத்தில் கவனம் செலுத்திய இயக்குநர் அதற்கான திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். தொடங்கும் போது எரிகல், அதைப் பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானி என நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் அடுத்த காட்சியிலேயே ஹீரோவுக்கு ஹீரோயினுக்குமான ப்ளாஷ்பேக், பாடல், அவர்களிடையே வரும் பிரிவு என்று சோதிக்கிறது. முதலில் தமிழ் சினிமா இந்த லூப்பிலிருந்து தான் வெளியே கொண்டு வரவேண்டும். போகிற போக்கில் வசனத்திலேயே வைத்திருக்க வேண்டிய ஒரு காட்சிக்கு எதற்கான அவ்வளவு பெரிய ப்ளாஷ்பேக். ஹீரோவும் ஹீரோயினும் பிரிவதற்கு சொல்லப்படும் காரணத்தில் கூட எந்தவித அழுத்தமும் இல்லை. மீண்டும் நடக்கப் போகும் டைம் லூப்பில் அந்த ப்ளாஷ்பேக் காட்சியும், பாடலும் மீண்டும் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சத்தை அந்த காட்சிகள் ஏற்படுத்துகின்றன. அதே போல எந்தெந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் லூப்பில் வரப் போகின்றன என்பதை எளிதில் யூகித்து விடமுடிகின்ற அளவுக்கு செயற்கையான காட்சியமைப்பு. உதாரணமாக ஒவ்வொருவராக வலிந்து வந்து நாயகனுக்கு குட் மார்னிங் வைப்பதிலிருந்தே தெரிந்து விடுகிறது, இந்த காட்சி மீண்டும் வரப்போகிறது என்று.
நாயகனாக புதுமுகம் சதீஷ் குமார். பார்ப்பதற்கு பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சாயலில் இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. காதல் காட்சிகள், எமோஷனல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என எப்போதும் முகத்தை ஒரே போன்றே வைத்திருக்கிறார். நாயகி மிர்னாலினி ரவியும் நாயகனுடன் போட்டிப் போட்டு நடிப்பில் சொதப்புகிறார். படம் தொடங்கியது முதல் இறுதிக் காட்சி வரை படு செயற்கையான நடிப்பு. போலீஸ் அதிகாரியாக வரும் கருணாகரனின் நடிப்பு மட்டுமே உறுத்தாமல் இருக்கிறது. காமெடிக்கு தங்கதுரை, ரமேஷ் திலக், கருணாகரன், டேனியல் என ஒரு பெருங்கூட்டமே இருந்தும் கண்ணுக்கெட்டிய வரை காமெடி தென்படவில்லை.
படத்தின் ஒரே ஆறுதல் ஜிப்ரானின் பின்னணி இசை மட்டுமே. தொய்வான திரைக்கதையை பல இடங்களில் காப்பாற்றுவது ஜிப்ரான் தான். சயின்ஸ் ஃபிக்ஷன் கதைக்களத்துக்கு தேவையான உறுத்தாத ஒளிப்பதிவை கார்த்திக் கே தில்லை செய்திருக்கிறார். படத்தின் எரிகல், வேற்றுகிரக கருவி, ஜாங்கோ கருவி என எதிலும் கிராபிக்ஸ் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. லாங் ஷாட்டில் ஓரளவு தெரியும் நேர்த்தி, க்ளோசப் காட்சிகளில் பல்லிளித்து விடுகிறது.
எடுத்துக் கொண்ட கதைக்களம் சரியானது தான். ஆனால் அதற்காக எழுதப்பட்ட திரைக்கதை எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் இருப்பது தான் படத்தின் பிரச்சினை. படத்தின் ஆரம்பத்தில் வந்து எரிகல் பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானி, படத்தின் இறுதியில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் கருணாகரன் இஷ்டத்துக்கு பார்ப்பவர்களை எல்லாம் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். இது போல படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.
மீண்டும் மீண்டும் வரும் சுவாரஸ்யமில்லாத காட்சிகள், வறட்டு காமெடிகள், ஒட்டாத வசனங்கள் என இயக்குநர் உருவாக்கிய டைம் லூப்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்ற உணர்வுதான் பார்க்கும் நமக்கு ஏற்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT