Published : 20 Nov 2021 01:10 PM
Last Updated : 20 Nov 2021 01:10 PM
பார்வையாளர்களின் ரசனை தற்போது மாறிவிட்டதாக சிம்பு பேசியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் சிலம்பரசன் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் பேசியவதாவது:
''பார்வையாளர்களின் ரசனை தற்போது மாறிவிட்டதாக நினைக்கிறேன். வில்லன்களை அடிப்பதும், பன்ச் டயலாக் பேசுவதும் இனி ஹீரோயிசம் இல்லை. ‘சார்பட்டா பரம்பரை’ அற்புதமான கமர்ஷியல் படம் என்று சொல்வேன். அந்தப் படத்திலும் ஹீரோ தன் எதிராளியிடம் சவால் விடுகிறார். ஆனால், அது மிகைப்படுத்தப்படவில்லை. இதுதான் ஹீரோயிசத்தின் புதிய வடிவம். ‘சார்பட்டா பரம்பரை’ திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் எப்படி ஓடியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.
‘வேட்டை மன்னன்’ மூலம் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பினேன். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. தற்போது ‘டாக்டர்’ போன்ற டார்க் காமெடி படங்களை மக்கள் ரசிக்கிறார்கள். அப்படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நெல்சன் மிகவும் திறமையானவர். ‘வேட்டை மன்னன்’ படத்தின் 10 சதவீதம் கூட டாக்டர் படத்தில் இல்லை. அப்படம் அப்போது ரிலீஸாகியிருந்தால் அதை இப்போது காலம் கடந்த படம் என்று சொல்லியிருப்பார்கள்.
நான் ஒரு படத்துக்காக எடை கூடினேன். ஆனால், இரக்கமே இல்லாமல் மக்கள் என்னை கேலி செய்தார்கள். என்னை பாடி ஷேமிங் செய்தார்கள். எனக்கும் அனுஷ்காவுக்கும் நடந்தது ஒன்றுதான். நாங்கள் படத்துக்காக எடை கூடினோம். ஆனால், அதிர்ஷ்டவசமாக அனுஷ்கா அளவுக்கதிகமான பாடி ஷேமிங் வசவுகளை எதிர்கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாகப் பேசினார்கள். இப்போது நான் ஆல்கஹாலைத் தொடுவதில்லை. சுத்த சைவமாகவும் மாறிவிட்டேன்''.
இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT