Published : 03 Nov 2021 01:16 PM
Last Updated : 03 Nov 2021 01:16 PM
'ஜெய் பீம்' படத்தைப் பார்த்துவிட்டு, சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது 'ஜெய் பீம்' படத்தைப் பார்த்துவிட்டு சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'ஜெய் பீம்' படம் முழுவதும் அழுது கொண்டிருந்தேன். என் இதயம் வலிக்கிறது. குற்றவுணர்ச்சியாகவும், அவமானமாகவும் இருக்கிறது. இப்படத்தைத் தயாரித்த ஜோ மற்றும் சூர்யாவுக்குத் தலைவணங்குகிறேன். தன்னைப் பற்றி மட்டுமே திரையில் காட்டாத ஒரு படத்தை ஒரு பெரிய நடிகரால் எடுக்க முடியும் என்று சூர்யா நிரூபித்துள்ளார்.
ஒரு முக்கியமான படத்தை உருவாக்கிய இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இளம் நடிகையான லிஜோமோல் ஜோஸின் தோள்களில் ஒட்டுமொத்தப் படம் அமர்ந்திருக்கிறது. செங்கேணியின் வாழ்க்கையைப் பற்றி அவரது கண்களே சொல்கின்றன. அற்புதமான பாத்திரம். பாராட்டுகள் மணிகண்டன். ஒவ்வொரு நடிகரும், படக்குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
'ஜெய் பீம்' படத்தை நாம் எடுத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை பற்றிய விழிப்புணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தமிழ் சினிமாவுக்கு என்னவொரு வெற்றி. ஜெய் பீம் என்றால் அன்பு. ஜெய் பீம் என்றால் ஒளி".
இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT