Published : 03 Nov 2021 11:31 AM
Last Updated : 03 Nov 2021 11:31 AM
சமீபகால தமிழ் சினிமாக்கள் தமிழகத்தின் பல்வேறு 'மக்கள் பிரச்சினைகளுக்காக' அழுத்தமாகக் குரல் கொடுத்து வருகின்றன.
அரசு மற்றும் அரசு முறைகளின் குறைபாடு, அரசால் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளான ஸ்டெர்லைட், மீனவர்கள் பிரச்சினை, ஈழத் தமிழர்கள் பிரச்சினை போன்ற பல உரிமை மறுப்பு, அடக்குமுறை, அரசு மற்றும் அதிகார வர்க்கத்தினால் சாமானியர்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறை ஆகியவற்றைக் கதைக்களமாக்கி வெகுமக்களின் பார்வைக்குக் கொண்டுசேர்த்து பேசுபொருளாக்கி விவாதத்திற்கு உட்படுத்தியதில் பெரும் பங்கு திரைப்படங்களுக்கு உண்டு.
தமிழ்ப் பழங்குடியினர் குறித்து, அரசு மற்றும் அதிகார வர்க்கம் அவர்கள் மீது தொடர்ந்து நிகழ்த்திவரும் அதிகார அத்துமீறல்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை வெகுமக்கள் ஊடகங்கள் பேசுவதற்கு தயங்கியோ தவிர்த்தோ வர, மக்களும் சமூகத்தில் அவர்களின் இருப்பையே கண்டுகொள்ளாத நிலையில் ''அவர்களும் நம்மோடு வாழும் சக மனிதர்கள்தான்'' என்று உரக்கச் சொல்லியிருக்கிறது 'ஜெய் பீம்'.
வீரப்பன் தேடுதலின்போது காவல்துறையினாலும் வனத்துரையினராலும் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ஏராளம். ஒரு தலைமுறையே சிதைத்துவிட்ட அந்த வன்கொடுமை நிகழ்வின் துயரங்கள் வெறும் சொற்களைக் கொண்டு கடத்திவிட முடியாதவை. அரசு மற்றும் அதிகாரத்தின் அந்த மனிதமற்ற முகத்தை 'சோளகர் தொட்டி' என்ற தன் நாவலின் வழி பதிவு செய்தார் எழுத்தாளர் ச.பாலமுருகன்.
இதுபோன்று பழங்குடி மக்களின் மீது யாரோ செய்த குற்றத்திற்காக அல்லது முடிக்கப்பட வேண்டிய வழக்கிற்காக பொய் வழக்குகள் பதிவு செய்து வழக்கமான குற்றவாளிகள் என்று அவர்களை வன்முறைக்கு உட்படுத்துவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் அதிகார அத்துமீறல்களில் ஒன்று. இந்த அவல நிலையை ஒரு தரப்பினர் தொடர்ந்து சொல்லிகொண்டே இருந்தாலும், அவர்களுக்காகக் குரல் எழுப்ப முன் வராமல் கள்ள மௌனம் சாதித்து வரும் ''இந்த சமுதாயத்தின் மனநிலைதான் என்ன?'' என்று ஒவ்வொரு காட்சியிலும் பொட்டில் அறைந்து கேள்வி கேட்கிறது இந்தத் திரைப்படம்.
இருளர்களின் எலி வேட்டை, பாம்பைப் பற்றிய அவர்களின் அறிவு, பேச்சு வழக்கு, இறப்புச் சடங்கு என்று அவர்களின் வாழ்வியல் தொடர்பான ஒவ்வொன்றையும் நுணுக்கத்துடன் பதிவு செய்தது முதல், சமூகத்தில் அவர்களின் இருப்பு நடத்தப்படும் விதம், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படைக் கோப்புகளில் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, அவர்கள் மீதான அதிகாரத்தின் கோர முகம் வரை அழுத்தமான திரைமொழியில் காட்சிப்படுத்தியதில் மிளிர்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.
வழக்கறிஞர் சந்துருவாக, ''கோர்ட்ல நீதி கிடைக்கலைன்னா ரோட்ல இறங்கிப் போராடுவேன், போராடுறத்துக்கு சட்டம் எனக்கு ஒரு ஆயுதம் மட்டும்தான்'' என்று தெறிக்கும் காட்சி ஒன்றிலேயே தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு நீதிப் போராளியாக உயிர் கொடுத்திருக்கிறார் சூர்யா.
கருவில் சிசுவுடன் தன் கணவனுக்காக கடைசிவரை நீதி கேட்கும் செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ், செய்யாத தவறை ஒப்புக்கொள்ள மறுத்து காவலர்களிடம் அடிபடும் அப்பாவி ராஜாகண்ணுவாக மணிகண்டன், காவல்துறையின் அநீதி கண்டு முகம் சுளிப்பது முதல் உண்மையான விசாரணை ரிப்போர்ட் சமர்ப்பித்து ''மனசாட்சிக்கும் சட்டத்திற்கும் உண்மையாக வேலை செய்த திருப்தி போதும்'' என்று சொல்லும் நேர்மையான போலிஸ் அதிகாரியாக மிகையில்லாமல் கச்சிதமாகத் தன் நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் பிரகாஷ்ராஜ் மற்றும் கதையில் வரும் இருளர் மக்களாக நடித்திருக்கும் பிறரும் மற்ற கதாபாத்திரங்களாக வருவோரும் அற்புதம்.
படத்தில் இடம்பெறும் வெகுவான வசனங்கள் தீப்பொறிகள் மற்றும் சமுதாயத்தின் முகத்தில் வீசப்பட்ட உண்மைக் கேள்விகள். 1995-ல் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைத் தொட்டு நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தில் இருந்தது போன்ற நீதிமன்றம், தியேட்டர், பேருந்து என்று காட்சிக்கு உண்மைத் தன்மையைக் கூட்டுகிறது கலை வடிவமைப்பாளர் கே.கதிரின் கலையமைப்பு. கதையின் போக்கிற்கு ஏற்ப இயல்பையும் பதைபதைப்பையும் துல்லியமாகத் தன் கேமராவின் வழி நமக்குக் கடத்துகிறார் எஸ்.ஆர்.கதிர். பாடல்களில் நம்மை கவரும் ஷான் ரோல்டன் பின்னணி இசையில் கதைப்போக்கைத் தொந்தரவு செய்யாமல் அமைதி காக்கிறார்.
படம் பேசியிருக்கும் கருப்பொருளுக்காகவும் மற்றும் நீதிபதி கே.சந்துருவின் போற்றத்தக்க பணியினை அவர் வாழும் காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதற்காகவும் இந்தத் திரைப்படத்தைக் கொண்டாட வேண்டும்.
படம் பார்த்துவிட்டு நல்ல சினிமா என்று பாராட்டியதோடு கடந்து செல்லாமல், படம் நம் முன் வைத்த பல கேள்விகளைச் சிந்திப்பது முக்கியம். இன்று பழங்குடியினருக்கு ஊர்த் தலைவர்களாகப் போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு ஊரக அலுவலகங்களுக்குள் செல்லக்கூட அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை.
வழங்கப்பட்ட ஒரு நீதி என்பது முழு மாற்றம் ஆகிவிடாது, அது மாற்றத்திற்கான தொடக்க விதை மட்டுமே. இங்கு மாற்றம் என்பது எண்ணத்தில் வரவேண்டும், ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரும் சமம்தான். சக மனிதர்கள்தான். நிகழும் அநீதிகளுக்கு எதிராக ஒருங்கிணைவோம், குரல் கொடுக்க. ஜெய் பீம்.
- வசந்த், டிஜிட்டல் மாணவப் பத்திரிகையாளர்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT