Published : 30 Oct 2021 02:13 PM
Last Updated : 30 Oct 2021 02:13 PM

புனித் ராஜ்குமாருக்கு நேரில் அஞ்சலி: கதறி அழுத சரத்குமார்

பெங்களூரு

புனித் ராஜ்குமாருக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் சரத்குமார். அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று (அக்டோபர் 29) மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது திடீர் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் பிரபலமான நடிகர் என்பதால், கர்நாடக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

புனித் ராஜ்குமார் மறைவைத் தொடர்ந்து, பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புனித் ராஜ்குமாரின் உடல் திரையுலக பிரபலங்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு ரசிகர்கள் வரிசையில் நின்று புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதற்காக கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, நடிகர் - இயக்குநர் பிரபுதேவா, சரத்குமார் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார் சரத்குமார். அங்கிருந்தவர்கள் அவரைத் தேற்றினார்கள்.

சென்னையில் சரத்குமாரின் மகள் திருமண வரவேற்பு நடைபெற்றபோது, தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார் புனித் ராஜ்குமார்.

புனித் ராஜ்குமார் மறைவு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், "எனது இனிய நண்பர் புனித் ராஜ்குமார் மறைந்துவிட்டார் என்ற நம்பமுடியாத செய்தியைக் கேள்விப்பட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர். நமது நாட்டின் ஒட்டுமொத்தத் திரைத்துறையைக் குறிப்பாக கர்நாடக திரைத் துறையினரை இந்த சோகத்திலிருந்து தேற்ற, ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை.

விதியின் மர்மமான வடிவம், திரைத்துறையை மட்டுமல்ல, புனித்தின் ஒட்டுமொத்த நண்பர்கள் உலகத்தையும் புரிந்துகொள்ள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், சக நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் எங்களின் மனமார்ந்த அனுதாபங்கள். உன் இழப்பை நாங்கள் உணர்வோம். நீ என்றும் எங்கள் நினைவுகளில் வாழ்வாய் புனித்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x