Published : 26 Oct 2021 12:06 PM
Last Updated : 26 Oct 2021 12:06 PM

சிம்பு, டி.ராஜேந்தர் மீது மைக்கேல் ராயப்பன் காவல் ஆணையரிடம் புகார்: 'AAA' படப் பிரச்சினையின் முழுப் பின்னணி

சென்னை

சிலம்பரசன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இதனை முன்வைத்து சிலம்பரசன் - மைக்கேல் ராயப்பன் இருவருக்கும் இடையே பிரச்சினை உருவானது.

சிலம்பரசனின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், மைக்கேல் ராயப்பன் உடனான பிரச்சினை வெடிக்கும். சில தினங்களுக்கு முன்பு 'மாநாடு' படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கலை உருவாக்குகிறார்கள் என்று சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா ராஜேந்தர் இருவரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

தற்போது சிலம்பரசன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:

"பல வெற்றிப்படங்களை குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகத் தயாரித்திருக்கிறேன். மேலும் 2016-ம் ஆண்டு சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தயாரித்து வெளியிட்டேன். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார்.

இந்தப் படத்தில் தொடக்கத்திலிருந்தே சிம்பு சரிவர நடிக்கவில்லை. சொன்ன தேதியில் சரியாகப் படப்பிடிப்பிற்கு வருவதுமில்லை. இந்நிலையில் 50% படம் எடுத்து முடித்த நிலையில் திடீரென ஒரு நாள் என்னை அழைத்து, படத்தை இத்துடன் முடித்து ரிலீஸ் செய்துவிடலாம் எனவும், இதில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அதற்காக நானே ஒரு படத்தை இலவசமாக நடித்துத் தருவேன் என்று என்னையும் இயக்குநர் மற்றும் படத்தின் மேலாளர் ராஜேந்திரனையும் அழைத்துக் கூறிய நிலையில், நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. என்னை வற்புறுத்திப் படத்தை வெளியிடுங்கள், நஷ்டம் வந்தால் முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என உறுதியளித்தார்.

அதன் அடிப்படையில் நானும் மேற்கண்ட படத்தை 23-06-2017 அன்று வெளியிட்டேன். படமும் சரியாக ஓடவில்லை. பெருத்த நஷ்டமடைந்தேன். இதன் மூலமே ஏறத்தாழ 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதில் 12 கோடி ரூபாய் விநியோகஸ்தர்களுக்குத் தர வேண்டியிருந்தது. அதன் பிறகு என்னால் அடுத்த திரைப்படமும் தயாரிக்க முடியவில்லை.

இந்நிலையில் சிம்பு என்னை போனில் தொடர்புகொண்டு விரையில் அடுத்த படத்தை நீங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். அவர் தந்த வாக்கின்படி தேதி கூறும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால், அதன்பிறகு என் தொடர்பில் சிம்பு வரவேயில்லை, இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். என்னை ஏமாற்றும் நோக்கத்தோடு ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன். அப்போதைய தலைவரான விஷால் மற்றும் நிர்வாகிகள் பல முறை விசாரித்து விரைவில் ஒரு படம் நடித்துத் தரவேண்டும் எனச் சங்கம் கூறிய நிலையில், அவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால், நிர்வாகம் மாறிய பிறகு அதெல்லாம் முடியாது என்று தற்பொழுதுவரை இழுத்தடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தர் அளித்த பேட்டி ஒன்றில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது என்றும் அப்புகாரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கமும் சேர்ந்து கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் 'மாநாடு' படத்தை தீபாவளிக்கு வெளியிடத் தடை போட்டிருப்பதாகவும், கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும், மாமூல் கேட்பதாகவும், கந்துவட்டி கேட்பதாகவும் பல முறையற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தனர். இவை யாவும் பொய்யான குற்றச்சாட்டுகளே. 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தங்களால் தீபாவளிக்கு 'மாநாடு' படம் வர இயலாது என்றும், அப்படி வெளியிடும் பட்சத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே 'மாநாடு' திரைப்படம் நவம்பர் 25-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிக்கை மூலம் இவர்கள் குற்றச்சாட்டு கூறுவதற்கு முன்பே அறிவித்திருந்தார்.

இம்மாதிரியான தவறான தகவல்களைத் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் தந்து வருகின்றன. மேற்கூறிய குற்றச்சாட்டுகள் யாவுமே உண்மைக்குப் புறம்பானவை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் எடுத்த முடிவை மட்டுமே நிறைவேற்ற வலியுறுத்தினார்களே தவிர வேறு எந்த கட்டப் பஞ்சாயத்தும் இரு சங்கங்களிலும் நடைபெறவில்லை. மேலும், இப்பொழுது இவர்கள் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

எனவே, மேற்கண்ட விஷயத்தில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து, எனக்கு நல்லதொரு முடிவினை வழங்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தொடக்கத்திலிருந்தே பொய்யான உறுதியளித்து எனக்குப் பெரும் நஷ்டத்தை வரவழைத்து ஏமாற்றிய சிம்பு மற்றும் அவரது தந்தை, தாய் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்".

இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கொடுத்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x