Published : 23 Oct 2021 05:54 PM
Last Updated : 23 Oct 2021 05:54 PM
நயன்தாரா, த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்ட முன்னணி நாயகிகளைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
உசேன் தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'முதல் மனிதன்'. இதில் ஆடுகளம் நரேன், மாரிமுத்து, கெளசல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'முதல் மனிதன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 22) நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன், இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:
"துணிச்சலோடு இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் உசேன், அற்புதமான கதையை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் ராஜராஜ துரை, அருமையான பாடல்கள் தந்த தாஜ்நூர் ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மிக அழகாக இருந்தது. இது ஒரு நல்ல படம் அல்ல, மக்களுக்கு நல்ல பாடம். இந்தப் படம் பெரும் வெற்றி பெற வேண்டும்.
எனக்குத் தெரிந்து எங்குமே சாதி இல்லை. தாழ்த்தப்பட்டவர்களை வணங்கும் நிலை இன்று வந்துவிட்டது. இன்று அனைவரையுமே நாம் வணங்குகிறோம். அந்த நிலைதான் இப்போது இருக்கிறது.
இப்போது படம் எடுத்தால் 12 கேரவன், நயன்தாரா ஷூட்டிங் வந்தால் 7 உதவியாளர்கள், அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம். ஆண்ட்ரியா தமிழ் நடிகை. ஆனால், மும்பையில் இருந்து மேக்கப் மேன் வேணும் என்கிறார்.
இப்படி இருந்தால் தயாரிப்பாளர் எப்படிப் பிழைப்பான். நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி வந்தால் படப்பிடிப்புத் தளத்திலேயே இருக்கிறார். மம்முட்டி சொந்த கேரவன் வைத்திருக்கிறார். அவர்கள் தயாரிப்பாளருக்குச் செலவு வைப்பதில்லை, நம் ஹீரோக்களை எல்லாம் என்ன சொல்வது. சிலர் அக்கிரமம் செய்வதை நான் எடுத்துச் சொல்கிறேன்.
யாருக்கும் பயப்பட மாட்டேன். இந்தப் படம் வெற்றிகரமாக ஓடித் தயாரிப்பாளருக்கு லாபம் பெற்றுத் தர வேண்டும், சினிமா நன்றாக இருக்கிறது, மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்குச் சான்று ‘டாக்டர்’ திரைப்படம்தான். அது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் 40 கோடி ரூபாய் படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகி, சிவகார்த்திகேயன் அதற்குப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
த்ரிஷா நடித்த படத்தின் விழாவிற்கு வர 15 லட்சம் ரூபாய் கேட்கிறார். வெற்றி பெற்ற பிறகு இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் எனச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. தயாரிப்பாளருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT