Published : 21 Mar 2016 11:10 AM
Last Updated : 21 Mar 2016 11:10 AM
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தெறி'.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
'தெறி' இசை வெளியீட்டு விழாவில் இருந்து 25 துளிகள்:
* 'தெறி' இசை வெளியீட்டு விழா அரங்கினுள் யாருமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. வெளியே நடிகர், நடிகைகள் வருவது, போவதை மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வளவு கெடுபிடிகளுக்கு இடையிலும் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் காண முடிந்தது.
* சத்யம் திரையரங்கில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பல ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காததால் விஜய்யை வெளியே வரும்போதாவது பார்த்துவிட வேண்டும் என்று குழுமி இருந்தனர். ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நடிகர், நடிகைகள் அரங்கினுள் நுழைவதற்கு கால தாமதம் ஏற்பட்டது.
* முதலாவதாக விஜய் பாடிய 'செல்லாக்குட்டி' பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ திரையிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது.
* அரங்கினுள் விஜய் நுழைந்த போது கடும் விசில் சத்தங்களும், கைதட்டல்களையும் கேட்க முடிந்தது. இச்சத்தங்கள் அடங்க சில மணித்துளிகள் பிடித்தது. இசையமைப்பாளர் தேவா பாடிய 'ஜித்து ஜில்லாடி' பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது.
* 'தெறி' இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி ரம்யா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக 'தெறி' படத்தின் டீஸர் திரையிடப்பட்டது.
* முதலவாதாக மீனாவும் அவருடைய மகள் நைனிகாவும் மேடையேறினார்கள். "அட்லீ என்னிடம் பேசும் போது என்னைத் தான் நடிக்க அழைக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் என் மகள் நைனிகாவை நடிக்க கேட்ட போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறாள். நாலு வயது நிரம்பியவளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் கிடைப்பது இக்காலத்தில் அபூர்வமானது. தண்ணீருக்கு அடியில் காட்சிகள் படமாக்கப்பட்ட போது கொஞ்சம் பயந்துவிட்டேன். 3 முதல் 4 படங்கள் தேதிகள் இல்லாததால் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டிருக்கிறேன். எனக்கு அவருடைய நடனம் மிகவும் பிடிக்கும்" என்று பேச்சில் குறிப்பிட்டார் மீனா.
* 'நான் கடவுள்' ராஜேந்திரனை மேடைக்கு அழைத்த போது பலத்த கரவொலியை கேட்க முடிந்தது. அவருடைய பேச்சில் "'ஐ யம் வெயிட்டிங்' என்று விஜய் சார் முன்னால் வசனம் பேசும் போது மிகவும் பயமாக இருந்தது. ஆனால் சார் தான் என்னை சமாதானப்படுத்தினார். மிகவும் நட்போடு பழகினார், அவரோடு நடித்ததிற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று ராஜேந்திரன் பேசினார்.
* "ஷோபா அண்ணி, எஸ்.ஏ.சி அண்ணா அருமையாக புள்ளைய வளர்ந்திருக்கீங்க. சங்கீதா பாப்பா அருமையான ஆம்பளையே பார்த்திருக்கா" என்று தன்னுடைய பேச்சில் தெரிவித்தார் பிரபு.
* 'தெறி' படம் உருவான விதம், ரசிகர்களின் கடும் கரவொலிக்கு இடையே திரையிடப்பட்டது.
* "எப்போது எல்லாம் என் மகன் சோர்வு அடைகிறானோ அப்போது "எல்லா புகழும்" என்ற பாடலைத் தான் கேட்பான்" என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார் நடிகர் நாசர்
* இயக்குநர் மகேந்திரனை மேடையேற்றும் முன்பு அவரைப் பற்றிய வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. 'முள்ளும் மலரும்', 'ஜானி', 'உதிரிப்பூக்கள்' ஆகிய காட்சிகளோடு வீடியோவை சிறப்பாக அமைத்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து மேடையேறினார் இயக்குநர் மகேந்திரன்
* உங்க படத்தில் உலகத்தை காண்பித்தீர்கள், உங்களை உலககிற்கு காட்ட வேண்டும் என்று இயக்குநர் மகேந்திரனிடம் தாணு பேசி நடிக்க சம்மதம் வாங்கியிருக்கிறார்.
* "நான் மதிக்கும் மிகப்பெரிய கலைஞன் விஜய். 2015 மார்ச் மாதம் நான் விஜய்யின் படத்தில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் 2016 மார்ச்சில் இங்கு நிற்கிறேன். இயக்குநர் அட்லீ ஒரே ஒரு படம் இயக்கிவிட்டு, இன்று சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கி இருக்கிறார். கெட்ட பையன் சார் இந்த அட்லீ. இப்படத்தில் இயக்குநர் அட்லீ சென்டிமெண்ட் காட்சிகளை எல்லாம் மிகவும் அற்புதமாக கையாண்டு இருக்கிறார். நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்க வேண்டும். விஜய் என்ற பெரிய மகாநடிகரோடு நடித்திருக்கிறேன். ஒரு நல்ல மனிதன் என்பதற்கு சிறந்த உதாரணம் விஜய். இப்படத்தில் அவர் நடித்திருக்கும் சண்டைக்காட்சிகள் என்னை ஆச்சர்யமடைய செய்தது." என்று பேசினார் இயக்குநர் மகேந்திரன்.
* டி.ராஜேந்தர் பாடியிருக்கும் 'ராங்கு' படத்தின் பாடல் உருவான விதம் திரையிடப்பட்டது. நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் "விஜய் அண்ணன் தரை லோக்கலாக இறங்கி குத்தியிருக்கிறார்" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
* ஏமிஜாக்சன் "நான் விஜய்யின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருடன் இணைந்து நடனமாடும் போது எனக்கு நிறைய உதவிகள் பண்ணினார்" என்று பேசினார்.
* ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி இருக்கும் 50வது படம் 'தெறி' என்பதால் அவரைப் பற்றிய ஒரு வீடியோ பதிவு திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் மேடையேறினார்.
* "இந்த தருணத்தில் ஷங்கர் சார் மற்றும் வசந்தபாலன் சார் இருவரக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதல் வாய்ப்பு வழங்கியது அவர்கள் தான். விஜய் சார் மற்றும் இயக்குநர் அட்லீ இருவருக்கும் எனது 50வது பட வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி. இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே விஜய் சாரிடன் நடனத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான்" என்று பேசினார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
* தயாரிப்பாளர் தாணு பற்றி வீடியோ தொகுப்பு திரையிடப்பட்ட பின் பேசிய தாணு "நான் 'சச்சின்' படம் பண்ணும் போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 'துப்பாக்கி' பண்ணச் சொன்னார். அதற்கு பிறகு 'தெறி' கதையைக் கேட்க சொன்னார். இப்படத்தின் முதல் பாதியை கேட்ட் உடனே நான் தயாரிப்பதாக கூறினேன். படங்களில் ஷங்கரை மிஞ்சிவிட்டான் அட்லீ. ஷங்கர் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இருவரின் கலவை தான் அட்லீ. சூப்பர் ஸ்டார் கிட்ட போகும் போது எனக்கு பேச வராது, அதே போல் தான் விஜய்யிடமும். 'தெறி' போன்று 10 படங்கள் அவரோடு பண்ணலாம். தெலுங்கு திரையுலகிற்கு ஒரு 'பாகுபலி' என்றால், தமிழ் திரையுலகிற்கு ஒரு 'தெறி'" என்று பேசினார்.
* இயக்குநர் அட்லீ பற்றிய வீடியோ தொகுப்பு திரையிடப்பட்ட பின் பேசிய அட்லீ "விஜய் டிவி மகேந்திரன் இக்கதையைக் கேட்டவுடன் இது விஜய் சாருக்கு பொருத்தமாக இருக்கும் என்றார். அது தற்போது உண்மையாகி இருக்கிறது. இப்படத்தில் எனக்கு அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத ஒன்று. எனக்கு பிடித்த ஒரு காதல் விஜய், உங்களுக்கு பிடித்த ஒரு மாஸ் விஜய், அவருடைய குடும்பத்துக்கு பிடித்த ஒரு விஜய் என இப்படத்தில் இருக்கிறார். 'ஜித்து ஜில்லாடி' பாடலுக்காக 40 நொடிகள் ஒரே ஷாட்டில் நடனமாடி இருக்கிறார். இப்படத்தில் அரசியல் வசனங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் என எதுவுமே கிடையாது. 'தெறி' ஒரு நல்ல அப்பாவைப் பற்றிய கதை" என்று தெரிவித்தார்.
* அட்லீ பேசும்போது ரசிகர்கள் பலர் 'அண்ணா.. தெறி 2' என்று கத்தினார்கள். அதற்கு 'இருமா இருமா. முதல்ல 'தெறி' முடித்துக் கொள்கிறேன்' என்றார் அட்லீ.
* எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் என தொடங்கும் விஜய்யை பற்றி ஒரு வீடியோ பதிவு ஒன்றை திரையிட்டார்கள். அந்த வீடியோ பதிவு முடியும் போது "வாருங்கள் கொண்டாட்டத்தை தெறிக்க விடுவோம்" என்ற வசனத்துடன் முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து பலத்த கரகோஷத்திற்கு இடையே விஜய் மேடையேறினார்.
* "பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் நாயகனாக இருப்பார். இன்றைக்கு ஒரு இசையமைப்பாளர் உண்மையில் நாயகனாக இருக்கிறார். விர்ஜின் பசங்களோட தலைவர் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தில் ஒருத்தங்க செல்ஃபி புள்ள என்றால் இன்னொருத்தங்க குல்ஃபி புள்ள. என்னோட ரசிகர்கள் எல்லாரும் சில பல உயரங்கள் தொடணும்னு எனக்கு ஆசை. அடுத்தவங்க தொட்ட உயரத்தை இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்களே உங்களுக்கு ஒரு உயரத்தை செட் பண்ணி அதை அடைய முயற்சி பண்ணுங்கள். எனக்கு பொதுவாக என் படத்தைப் பற்றி பேசுவது பிடிக்காது. ஆகையால் என் மனதில் பட்டதைப் பேசுகிறேன். தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் வெற்றி எப்பவுமே ஆயிரம் தோல்விகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும்" என்று பேசினார் விஜய்.
* விஜய் தன்னுடைய பேச்சுக்கு இடையே இரண்டு குட்டிக் கதைகளைச் சொன்னார். அதில் ரஷ்ய தலைவர் மாவோ பற்றிய ஒரு கதை எனக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சீனத் தலைவர்.
* அதனைத் தொடர்ந்து பலத்த கரகோஷத்திற்கு இடையே 'தெறி' ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதேவேளையில் இணையத்திலும் ட்ரெய்லர் வெளியானது.
* 'தெறி' படக்குழுவினர் அனைவருமே மேடையேறி படத்தின் இசையை வெளியிட்டார்கள். இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் நைனிகா 'தெறி' சி.டியை திறந்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT