Published : 17 Oct 2021 01:02 PM
Last Updated : 17 Oct 2021 01:02 PM

எவ்வளவோ புயல்கள் வந்தாலும் அதிமுக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே ஆசை: லதா

சென்னை

எவ்வளவோ புயல்கள் வந்தாலும் அதிமுக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று லதா தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சித் தொடங்கி 49 ஆண்டுகள் முடிவுற்று, இன்று (அக்டோபர் 17) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை அதிமுக கட்சியினர் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். இதர கட்சியினர் பலரும், இதற்காக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதிமுக 50-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சத்யா ஸ்டூடியோவில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நடிகை லதா. மேலும், அதிமுக 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது தொடர்பாக லதா கூறியிருப்பதாவது:

"1972-ம் ஆண்டு இதே சத்யா ஸ்டூடியோவில் தான் எம்.ஜி.ஆர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கினார். இன்று 49 ஆண்டுகள் நிறைவு பெற்று 50-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

எம்.ஜி.ஆரோடு நான் நடித்த முதல் படமான 'நேற்று இன்று நாளை' படத்தின் படப்பிடிப்பு இதே சத்யா ஸ்டுடியோவில் தான் நடந்தது. அப்போதுதான் கட்சியைத் துவங்கினார். அதே சத்யா ஸ்டுடியோவில் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களுக்குச் சிறப்பான ஆட்சியை வழங்கினார்.

அதிமுக வளர்ச்சி நிதிக்காக மதுரை, திருச்சி, கோவை, தேனி, பவானி போன்ற ஊர்களில் கலைநிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த 35 லட்ச ரூபாயை எம்.ஜி.ஆரிடம் வழங்கியபோது ஒரு நடராஜர் சிலையை எனக்கு பரிசாக வழங்கியதை என்னால் மறக்க முடியாதது.

அவர் ஆரம்பித்த கட்சி இன்னும் எவ்வளவோ புயல்கள் வந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. உலகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இன்றும் என் மேல் அன்பு வைத்து நட்புடன் இருக்கிறார்கள். அது எனக்கு கழகத்தின் மூத்த மூன்றாவது பெண் உறுப்பினராகப் பெருமையாக உள்ளது"

இவ்வாறு லதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x