Published : 12 Oct 2021 01:37 PM
Last Updated : 12 Oct 2021 01:37 PM
'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' கதை திருட்டு என்ற சர்ச்சையில் நடந்தது என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அரிசல் மூர்த்தி இயக்கத்தில் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், கோடங்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'. 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் மூலம் பாடகர் க்ரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்தப் படம் செப்டம்பர் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. 2016-ம் ஆண்டு வெளியான மராத்தி படமான 'ரங்கா படாங்கா' படத்தின் தழுவல் என்று பலரும் விமர்சித்தார்கள். இது தொடர்பான தகவல் வெளியானவுடன், சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் உரிமைக்கு சூர்யா பணம் கொடுத்ததாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக விசாரித்தபோது, '' 'ரங்கா படாங்கா' படத்தைத் தமிழில் ரீமேக் செய்யத் தயாரிப்பாளர் ஒருவர் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். அரிசல் மூர்த்தி தரப்பில் முதலில் மராத்தி படத்தின் ரீமேக்கை வாங்கலாமா என்று யோசனை எழுந்துள்ளது. ஆனால், மாடு காணாமல் போவதைத் தாண்டி இரண்டு படங்களின் கதைகளும் வேறுபட்டுள்ளன என்பதால் ரீமேக் உரிமை வாங்குவது அவசியம் இல்லை என்று சிலர் கூறியதால் அவர் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் யோசிக்கவில்லை. அந்தப் படத்தில் மாடுகள் காணாமல் போவதை மட்டும் எடுத்துக்கொண்டு, 'பீப்ளி லைவ்' பாணியில் வேறொரு களத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் அரிசில் மூர்த்தி.
இந்த விஷயம் அனைத்துமே படம் வெளியானவுடன்தான் சூர்யாவுக்குத் தெரியவந்துள்ளது. உடனடியாக 'ரங்கா படாங்கா' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருப்பவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார் சூர்யா. பின்பு ஒரு தொகையையும் கொடுத்துள்ளார்'' என்று தெரியவந்துள்ளது.
சூர்யாவின் இந்தச் செயலுக்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT