Published : 06 Oct 2021 06:42 PM
Last Updated : 06 Oct 2021 06:42 PM
நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்குத் தனது ஃபேஸ்புக் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இடிமுழக்கம்'. ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர். அவருடைய நடிப்புக்குப் புகழாரம் சூட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சீனு ராமசாமி.
அந்தப் பதிவில் சீனு ராமசாமி கூறியிருப்பதாவது:
" 'இறைவனுக்கு சித்தர்கள் போல் நடிப்புத் துறைக்கு தன்னை அர்ப்பணித்த நடிப்புச் சித்தர் என்றால் அது அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் என்றால் அது மிகையாகாது. அவரது திறமை கண்டு அன்று 'தர்மதுரை' படத்திலும், இன்று நான் இயக்கிய 'இடிமுழக்கம்' படத்திலும் உணர்ந்து வியந்தேன்.
நினைத்த கணத்தில் கண்ணீர், கோபம், அன்பு, பாசாங்கு கருணை, தயை, கழிவிரக்கம் போன்ற திறன்களை நொடிப்பொழுதில் நேர்த்தியாக வெளிப்படுத்தக்கூடிய நடிகர் இவர். இளைய தலைமுறையினர் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள இவர் நல்ல முன்மாதிரி. மெத்தட் ஆஃப் ஆக்டிங் (Method of acting) மற்றும் இயல்பின் நடிப்பு இரண்டையும் வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நடிகர்.
அதுமட்டுமல்ல முழுக் காட்சி முடியும் வரை ஏன் நாள் முழுக்க கேமரா இவர் பார்வை படும் தூரத்தில் இருப்பார்.
"பாஸ்கர் அண்ணனைக் கூப்பிடுங்க" என்பேன்.
"தம்பி நான் ரெடி'' என்பார்.
அரை மணி நேரத்திற்கு முன்பே களத்திற்கு அன்று வழங்கப்பட்ட உடையுடன் நிற்பார். மேக்கப் இல்லேலண்ணே என்பேன், கன்னத்தில் விரல் அழுத்தி. "இல்லை தம்பி" என்பார் நடிகர் திலகத்தை தன் குருவாக நினைக்கும் சீடர். படப்பிடிப்பில் 16 செல்வங்களையும் அனைவரும் பெற வேண்டி அதை வரிசைப்படுத்திப் பாடல் பாடி வாழ்த்தினார் .
நான் இந்த அர்ப்பணிப்பான பெரிய மனிதனின் ஆசிகளாக ஏற்றுக்கொண்டேன். படப்பிடிப்புக் களத்தில் அவர் பகுதி நிறைவு நாளில் அவருக்குப் பிறந்த நாள் வந்தது. கேக் வெட்டி வாழ்த்தினோம்".
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT