Published : 10 Sep 2021 09:30 PM
Last Updated : 10 Sep 2021 09:30 PM

இன்னும் நன்றாக சிரிக்க வைத்து, சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் என் உயிர் இந்த பூமியை விட்டுச் செல்லும்: வடிவேலு

சென்னை

மக்களை இன்னும் நன்றாக சிரிக்க வைத்து, சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் என் உயிர் இந்த பூமியை விட்டுச் செல்லும் என்று வடிவேலு தெரிவித்தார்.

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சுராஜ் - வடிவேலு இணையும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் வடிவேலு பேசியதாவது:

"இந்த மாதிரி துன்பத்தை வேறு யாருமே அனுபவிக்க முடியாது. எல்லாரும் வைகைப் புயல், வைகைப் புயல் என்று சொல்கிறார்கள். என் வாழ்க்கையில் இடையில் ஒரு சூறாவளிப் புயலே அடித்துவிட்டது. ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் சென்று "அய்யா.. மனசே சரியில்லை. நிம்மதி இல்லை.. தூக்கமே வரல. எனக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்கள்" என்று கேட்டான். அதற்கு அந்த மருத்துவர் ”இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை, நீங்கள் திங்கட்கிழமை வாங்க நான் உங்களுக்கு உதவி பண்றேன்” என்று சொன்னார்.

"இல்லங்க.. உண்மையில் எனக்கு மனசு சரியில்லை. தூக்கமே வரமாட்டேங்குது முடியல. என்னை நீங்கதான் காப்பாற்றணும். ஏதாச்சும் உதவி பண்ணுங்க” என்று நோயாளி மீண்டும் கேட்டார். நீங்கள் திங்கட்கிழமை வாங்க என்று மருத்துவர் சொன்னதை நோயாளி கேட்கவே இல்லை. உடனே மருத்துவர், ”பக்கத்தில் சர்க்கஸ் நடக்குது, ஒரு பபூன் பிரமாதமாக காமெடி பண்றான். நானும் மனைவியும் போக டிக்கெட் வாங்கி வைச்சிருக்கோம். என் மனைவியோட டிக்கெட்டை உன்கிட்ட தர்றேன். நீங்களும் நானும் போய் அந்த சர்க்கஸைப் பார்ப்போம். அந்த பபூன் காமெடியைப் பார்த்தால் மனசுல உள்ள பாரமெல்லாம் இறங்கிடும். அதற்கு அப்புறம் ஈசியாகிடுவீங்க” என்று மருத்துவர் சொன்னார். உடனே நோயாளி, "அந்த பபூனே நான்தான்யா" என்று சொல்லியிருக்கிறான். கிட்டத்தட்ட அந்த அளவுக்குத்தான் நான் வாழ்ந்தேன்.

கரோனா என்ற கொடிய நோய் வந்து தம்பியை அண்ணன் பார்க்க முடியல, தாயை மகன் பார்க்க முடியல, மனைவியை புருஷன் பார்க்க முடியல, பிள்ளையை அப்பா - அம்மா பார்க்க முடியல. குடும்பத்தினர் யாராவது இறந்துவிட்டால் வெளிநாட்டிலிருந்து வருவதற்கு விசா கூட கிடைக்கவில்லை. கணவரே இறந்துவிட்டால் கூட மனைவியே "சீக்கிரம் கொண்டு போய்விடுங்கள் ஐயா, பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது" என்று சொல்லும் நிலைமை வந்துவிட்டது. இதனால் என்னுடைய பிரச்சினை சாதாரண பிரச்சினை ஆகிவிட்டது.

கரோனா என்ற பிரச்சினை உலக அளவில் அனைவரையும் பயமுறுத்தி, அச்சுறுத்தி மிரள வைத்துவிட்டது. உலக மக்களைத் தூக்கமில்லாமல் ஆக்கிவிட்டது. அந்த மாதிரி நேரத்தில் எனது காமெடி மருந்தாக இருந்தது எனக்குக் கிடைத்த புண்ணியமாகப் பார்க்கிறேன். அந்த நேரத்தில் எனது மனதைத் தேற்றிக் கொண்டேன். உங்கள் முன்னால் என்னை சந்தோஷமாக நிறுத்திய அண்ணன் சுபாஷ்கரனுக்கு நன்றி. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்போதிலிருந்து எனது பயணம் கண்டிப்பாக ஒரு நகைச்சுவை பயணமாக இருக்கும். மக்களை இன்னும் நன்றாக சிரிக்க வைத்து, சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் என் உயிர் இந்த பூமியை விட்டுச் செல்லும். இந்த நேரத்தில் இதற்கு முன்பு நடந்ததை எல்லாம் மறந்துவிடுவோம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை நான் என்றைக்குச் சென்று பார்த்தேனோ அன்று முதல் என் வாழ்க்கை வெளிச்சமாக மாறிவிட்டது. நான் சும்மாதான் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். இனிமேல் எல்லாமே நல்லதாகவே நடக்கும் என நினைக்கிறேன்”.

இவ்வாறு வடிவேலு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x