Published : 04 Feb 2016 11:35 AM
Last Updated : 04 Feb 2016 11:35 AM
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஹன்சிகா. தற்போது ‘போக்கிரி ராஜா’, ‘மனிதன்’, ‘உயிரே உயிரே’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்...
நீங்கள் சுந்தர்.சி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறீர்கள். அவரது இயக்கத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி உள்ளது?
சுந்தர் சார் எனது குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். அவரது படத்தின் படப்பிடிப்புகள் எப்போதும் சுவாரசியமாகவும், கலகலப்பாகவும் இருக்கும். அவர் படங்களில் எப்போதும் நிறைய நடிகர் நடிகைகள் இருப்பார்கள். யாரும் கேரவனுக்குள் இருக்க மாட்டார்கள். அனைவரும் வெளியே அமர்ந்து ஒரு வருடன் ஒருவர் பேசிக் கொண்டிருப்பார்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்றதுபோல இருக்கும். நான் சுந்தர் சாரின் படத்திலும், குடும்பத்திலும் ஒரு ஆளாக இருப்பது என் அதிர்ஷ்டமே. அவர் மட்டுமல்ல, அவரது மகள்களும் எனக்கு நல்ல தோழிகளாக இருக்கிறார்கள்.
‘அரண்மனை’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘ஆம்பள’ , ‘அரண்மனை 2’ என்று நான் அவருடன் பணியாற்றிய படங்கள் அனைத்தும் மக்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி யாக இருக்கிறது.
‘அரண்மனை 2’ படத்தில் நிறைய நாயகிகள் நடித்திருந்ததால் உங்களுக்குள் ஈகோ பிரச்சினை இருந்ததா?
வேலை செய்யும் இடத்தில் ஈகோ என்பதே இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். அவரவருக்கு உரிய இடம் திரைத்துறையில் உள்ளது. த்ரிஷா என்னை விட சீனியர். எங்களுக்கு நடுவில் நிச்சயம் ஈகோ இல்லை.
நடிகை குஷ்பு, நீங்கள் அவரைவிட திறமையானவர் என்று கூறியிருக்கிறாரே?
நடிப்பில் சாதித்த நடிகை ஒருவர் இப்படி சொன்னதை எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக எடுத்துக்கொள்கிறேன்.
‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகத்துக்கு வாய்ப்புள்ளதா?
இந்தக் கேள்விக்கு சுந்தர் சார்தான் பதில் சொல்ல முடியும்.
நீங்கள் ஆதரவற்ற பல குழந்தைகளுக்கு உதவுவதாக கூறப்படுகிறதே. அதை எப்போது ஆரம்பித்தீர்கள்? அதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது?
நான் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதைப் பற்றி எப்போதுமே பேசுவதில்லை. அது என் தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி பேசி அந்த குழந்தைகள் மீது ஊடக வெளிச்சம் விழ வேண்டாம் என நினைக்கிறேன். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அவர் களை சென்று பார்ப்பேன். மற்ற நேரங்களில் என் அம்மா அவர்களை கவனித்துக் கொள்வார். எனது இந்த எண்ணம் வருவதற்கு என் அம்மாதான் காரணம். அவர் தான் 5 வயது முதலே எனக்குள் இந்த எண்ணங்களை விதைத்தவர்.
சிறு வயதில் இருந்தே நாங்கள் பண்டிகைகளையும், பிறந்தநாளையும் அனாதை இல்லங்களிலோ, முதியோர் இல்லங்களிலோதான் கொண்டாடுவோம். நாமும் வளர்ந்த பிறகு நமது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஆதரவற்ற வர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே என் மனதில் தோன்றியது. இது எனது , மகிழ்ச்சிக்காகவும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் நான் செய்யும் தனிப்பட்ட விஷயம்.
தற்போது கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வரத் தொடங்கிவிட்டன. உங்களது கனவு கதாபாத்திரம் என்ன?
கனவு கதாபாத்திரம் என்று இப்போதைக்கு எதுவும் கிடையாது. நான் எனது படங்களில் என்னால் முடிந்த சிறந்த நடிப்பை தருகிறேன். எனது ரசிகர்களே ஒரு கதாபாத்திரத்தை பார்த்து இதுதான் ஹன்சிகாவின் கனவு பாத்திரம் என்று சொன்னால் அதுவே எனது கனவு பாத்திரமாக இருக்கும். எனது வளர்ச்சிக்கும் நான் இந்த நிலையில் இருப்பதற்கும் காரணம் என் ரசிகர்கள்தான். அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT