Published : 26 Aug 2021 11:28 AM
Last Updated : 26 Aug 2021 11:28 AM
சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட பிராந்திய மொழிப் படமாகவும் சாதனை படைத்தது. மேலும் 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யபட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை படிப்படியாகக் குறைந்து வருவதை முன்னிட்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு. கடந்த ஆகஸ்ட் 23 முதல் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்படி வெளியிடுவதால் கிடைக்கும் லாபத் தொகையைத் திரையரங்கு உரிமையாளர்களும், திரையரங்கு உரிமையாளர் சங்கமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இந்தப் பேச்சுவார்த்தையில் அதற்கான முடிவு எட்டப்பட்டால் வரும் வாரங்களிலேயே 'சூரரைப் போற்று' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT