Published : 25 Feb 2016 04:28 PM
Last Updated : 25 Feb 2016 04:28 PM

திரையரங்கிற்குச் சென்று பார்க்க தரமான படங்கள் வருவதில்லை: மகேந்திரன் கவலை

திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் அளவுக்கு தரமான படங்கள் வெளிவருவதில்லை என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.

அஸ்வின், ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஜீரோ'. ஷிவ் மோகா இயக்கியிருக்கும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். மாதவ் மீடியா தயாரித்திருக்கும் இப்படத்தை ப்ளூ ஓஷன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பம்சமாக படத்தின் ட்ரெய்லரோடு சுமார் 18 நிமிடக் காட்சிகளைத் திரையிட்டு காட்டினார்கள்.

இயக்குநர் மகேந்திரன், வெற்றிமாறன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரோடு கலந்து கொண்டார்கள். இயக்குநர் மகேந்திரன் இப்படத்தின் இசையை வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார்.

படத்தின் இசையை வெளியிட்டு இயக்குநர் மகேந்திரன் பேசியது,"வெற்றி பெற்று நிரூபித்தவர்களை வைத்து படம் எடுப்பது பெரிய விஷயமல்ல. புதியவர்களை வைத்து படம் எடுப்பதுதான் பெரிது. அந்த வகையில் இது பெரிய படம். இப்போது எல்லாம் திரையரங்கிற்குப் போய் பார்க்கும் அளவுக்கு தரமான படங்கள் வருவதில்லை.

ஆனாலும் இன்றுவரை வந்த எல்லா படங்களையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். நிறைய டிவிடியில்தான் பார்ப்பேன். 'விசாரணை 'படத்தை டிவிடியில் பார்க்கவில்லை. நல்ல படத்தை தியேட்டரில் சென்றுதான் பார்ப்பேன். மனிதன் பிறக்கும்போதும் ஜீரோ, இறக்கும்போதும் ஜீரோ. இந்த ஜீரோ படம் என்ன சொல்ல வருகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறேன். இந்த பழக்கத்தை ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

மேலும், இயக்குநர் மகேந்திரன் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரையும் தனித்தனியாக குறிப்பிட்டு பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x