Published : 31 Jul 2021 02:03 PM
Last Updated : 31 Jul 2021 02:03 PM
கமல் நடித்துவரும் 'விக்ரம்' படத்தின் இந்தி டப்பிங் உரிமம் விற்பனையில் சாதனை புரிந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. சில தினங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்க அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதனை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனை முன்வைத்து இப்போதே உரிமைகள் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாக 'விக்ரம்' படத்தின் இந்தி டப்பிங் உரிமையைப் பெரும் விலைகொடுத்து கோல்ட் மைன் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுமார் 37 கோடி ரூபாய் கொடுத்துக் கைப்பற்றி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் நடிப்பில் வெளியான படங்களின் இந்தி டப்பிங் உரிமை விற்பனையில் 'விக்ரம்' படத்தின் உரிமையே அதிக விலைக்குப் போயிருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும், டிஜிட்டல், தொலைக்காட்சி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட உரிமத்தைக் கைப்பற்ற இப்போதே கடும் போட்டி நிலவி வருகிறது.
'விக்ரம்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT