Published : 26 Jul 2021 06:45 PM
Last Updated : 26 Jul 2021 06:45 PM

வைரலான 'அயன்' வீடியோ: திருவனந்தபுரம் சிறுவர்களைப் பாராட்டிய சூர்யா

சென்னை

இணையத்தில் வைரலான 'அயன்' வீடியோவை உருவாக்கிய திருவனந்தபுரம் சிறுவர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார் சூர்யா.

சமீபமாக இணையத்தில் முன்னணி படங்களின் காட்சிகள், பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை அப்படியே தத்ரூபமாக மீண்டும் காட்சிப்படுத்தி வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுவர்கள் இவ்வாறு வெளியிடும் வீடியோக்களால் படக்குழுவினர் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.

தற்போது, 'அயன்' படத்தின் காட்சிகள், பாடலை அவ்வாறு வெளியிட்டு பாராட்டுக்களைக் குவித்து வருகிறார்கள் திருவனந்தபுரம் சிறுவர்கள். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியிருந்தார் சூர்யா.

அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சிறுவர்களுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார் சூர்யா. அதில் அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். அந்த ஆடியோ பதிவில் சூர்யா கூறியிருப்பதாவது:

"திருவனந்தபுரம் ராஜாஜி நகரில் இருக்கும் அனைத்து இளைய சகோதரர்களுக்கும் இந்த செய்தி. வணக்கம் நான் சூர்யா பேசுகிறேன். என்னே ஒரு அற்புதமான பணியை நீங்கள் அனைவரும் செய்திருக்கிறீர்கள். முழுவதும் ரசித்தேன். 'அயன்' படம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதை இவ்வளவு உயிர்ப்புடன் மீண்டும் உருவாக்கியதற்கு முதலில் பெரிய நன்றி. 'அயன்' குழுவிலிருந்து அனைவருமே இதைப் பார்த்து ரசித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்தக் காணொலியைக் கண்டிருந்தால் கே.வி.ஆனந்த் அவர்களும் அதிகம் சந்தோஷப்பட்டிருப்பார். எந்தவிதமான தொழில்நுட்பக் கருவிகள் இல்லாமல் இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். உங்களின் பேரார்வம் இருந்தால், பேரன்பு இருந்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியும், எதுவும் நம்மைத் தடுக்காது என்கிற செய்தியை நீங்கள் பலருக்குக் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் எதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எந்த சாக்கும் சொல்ல வேண்டாம் என்கிற கருத்தையும் நீங்கள் சொல்வதைப் பார்க்க முடிகிறது. முழு காணொலியில் உங்கள் உற்சாகத்தைப் பார்த்து ரசித்தேன். மீண்டும் பழைய நினைவுகளை அசைபோடுவது நன்றாக இருந்தது.

உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். இதன் பின்னால் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு. உங்கள் குடும்பம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவியுங்கள். நீங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் கண்டிப்பாகச் சிறந்து விளங்குவீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்."

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x