Last Updated : 11 Feb, 2016 10:50 AM

 

Published : 11 Feb 2016 10:50 AM
Last Updated : 11 Feb 2016 10:50 AM

இதுதான் நான் 12: அழுதா அழுவாங்க... சிரிச்சா சிரிப்பாங்க!

நான் படிச்ச சாந்தோம் ஸ்கூல்ல அப்போ கல்ச்சுரல் நிகழ்ச் சியைவிட ஸ்போர்ட்ஸுக்குத் தான் ரொம்ப முக்கியத்துவம் இருக் கும். அதுவும் அந்த நேரத்துல கிரிக்கெட் போட்டிக்கு அப்படி ஒரு முக்கியத்துவம். எங்க ஸ்கூல்ல படிச்ச சில பேர் இந்திய டீம்ல கிரிக்கெட் விளையாடியிருக்காங்க. அதனால பெருசா கல்ச்சுரல் நிகழ்ச்சிக்கு எங்க ஸ்கூல்ல இடமில்லை. வேறு எங்காவது கல்ச்சுரல் நிகழ்ச்சி நடக்குறப்ப அங்கே போனா, ‘‘யாருப்பா நீ? இங்க டான்ஸ் போட்டி நடக்கப் போகுது. நீயெல்லாம் இதுல இல்லை. சீக்கிரம் இடத்தை காலிப்பண்ணு’’னு சொல்லி திருப்பி அனுப்பிடுவாங்க. அப்படி என்னை நிறைய தடவை திருப்பி அனுப்பியிருக்காங்க.

ஒரே ஒரு தடவை, வேற ஒரு ஸ்கூல்ல நடந்த ஒரு கல்ச்சுரல் நிகழ்ச்சியில் மட்டும் ஆடியிருக்கேன். யாருக்கும் தெரியாம மைக்கேல் ஜாக்சனோட மூவ்மெண்ட்ஸை வீட்ல ஆடிப் பார்ப்பேன்னு சொன்னேன்ல, அந்த நேரத்துலதான் அதுவும் நடந்தது. முதல் தடவையா அவரோட ஸ்டெப்பை ஸ்டேஜ்ல ஆடினேன். நான் டான்ஸ் பயிற்சியிலே இருந்ததால ‘ஒன்.. டு.. த்ரி’னு டைமிங்கோட ஆடினேன். மத்த ஸ்கூல் பசங்க ஸ்டேஜையே கலக்கிட்டி ருந்தாங்க. அங்கு வந்திருந்த அவங்க சம்பந்தப்பட்ட நூறு, நூத்தம்பது பேரும் அதைப் பார்த்து சத்தமும், விசிலும் பறக்கவிட்டாங்க. நான் ஆடினப்போ ஒரு பையன்கூட அப்படி செய்யலை. ஏன்னா, எங்க ஸ்கூல்ல போட்டியில கலந்துக்குறது நாலு பேருன்னா, அந்த நாலு பேரை மட்டும்தான் அனுப்புவாங்க.

அன்னைக்கு நடந்த அந்த டான்ஸ் போட்டியில கலந்துகிட்டது மொத்தமே எட்டு பேர்தான். அதுலேயும் நான் எட்டாவது பரிசு. பத்து பேர் ஆடியிருந்தா நான்தான் பத்தாவது பரிசுன்னு நினைக் கிறேன். திரும்பிவந்ததும் என் நண்பர் கள்ட்ட, ‘‘என்னோட டான்ஸை யாருமே கண்டுக்கலடா’’னு சொன்னேன். ‘சரி, பரவாயில்லைடா. வகுப்பை கட் அடிச்சுட்டுத்தானே போனே. அதுல உனக்கு ஜாலிதானே’’னு கேஷுவலா சொன்னாங்க.

என்னோட வாழ்க்கையில் டான்ஸ் எப்படியோ அந்த மாதிரிதான் நண்பர் களும். ஒவ்வொரு காலகட்டத்துலேயும் ஒவ்வொரு ஃபிரெண்ட் வந்து கலந்திருக் காங்க. ஒரு தடவை மனசார ஏத்துக்கிட்டா அவ்வளவுதான். இன்னைக்கு எனக்கு 42 வயசு. எனக்கு 30, 32, 35 வருஷ ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. ஏன், 40 வருஷ ஃபிரெண்ட்ஸும் இருக்காங்க. என்கூட எல்.கே.ஜி படிச்சவன் இப்பவும் என்னோட நெருங்கிய நண்பனா இருக்கான்.

அப்பா, அம்மா, பிரதர்ஸ், என் னோட பசங்க, அதுக்குப் பிறகு என் வாழ்க்கையில ரொம்பவும் இடம் நண்பர்களுக்குத்தான். நான் நானாக இருக்குறது நண்பர்கள்ட்ட மட்டும்தான். என்னோட நெருங்கிய நண்பர்கள்ட்ட நூறு உதவிங்க கேட்டிருப்பேன். அவங்க அத்தனையும் செய்திருக்காங்க. ஆனா, அவங்க என்கிட்ட ரெண்டே ரெண்டு உதவிங்கதான் கேட்டிருப்பாங்க. அவங் கள்ட்ட நாம இவ்ளோ உதவிங்க கேட் குறோமேன்னு ஒரு தடவைக் கூட தோணு னதே இல்லை. ஏன்னா, என் ஃபிரெண்ட்ஸ் அந்த மாதிரி தோண வைக்கலை. ஃபிரெண்ட்ஷிப்ல நன்றி, தேங்க்ஸ்லாம் கிடையாதே.

‘உன் நண்பனைப் பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன்’, ‘நல்ல சகவாசம் வேணும்’ இப்படி நட்புக்கு சில பொன் மொழிகளை சொல்வாங்க. அதுல எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. ஏன்னா, நண்பர்கள்ல பணக்காரன், ஏழை, சாதி, மதம் இல்லாத மாதிரி நல்லவன், கெட்டவன்கூட கிடையாது. ஒருமுறை ஃபிரெண்ட் ஆகிட்டா அவன் நல்லவன்தான்!

ஒரு வயசுக்கு அப்புறம் சூழ்நிலை யால சிலர் மாறுவாங்க. சில விஷயங் கள் பண்ணத் தொணும். அதைவெச்சு அவன் கெட்டவன்னு சொல்லி, எப்படி பிரிய முடியும்? அவன் நம்ம பிரெண்ட். அவ்வளவுதான்!

என் பசங்களுக்கும் இதைதான் சொல்லி வைக்கிறேன். பெரியவனுக்கு இப்போ 12 வயசு. ‘‘உனக்கு எத்தனை ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க?’’னு கேட் டேன். ‘‘நாலு ஃபிரெண்ட்ஸ்’’னு சொன் னான். ‘‘லைஃப் லாங் இதை கன்டினியூ பண்ணணும்’’னு சொல்லியிருக் கேன். சின்னவன் சின்னப் பையன். அவனுக்கும் இதையே சொல்வேன்.

கல்யாணம் முடிஞ்ச பிறகு வேற மாதிரியும், குழந்தைங்க பிறந்துட்டா வேற மாதிரியும் சிலர் ஆகிடுறாங்க. அப்படி மாறாம இருக்குறதுக்கு டிரை பண்ணணும். நான் நாலாம் கிளாஸ், ஆறாம் கிளாஸ்ல ஃபிரெண்ட்ஸ்கிட்ட எப்படி இருந்தேனோ, அப்படித்தான் அவங்களோட இப்பவும் இருக்கேன். அதுவும் சென்னையில இருந்தா என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸோடதான் அதிகம் இருப்பேன். தினம் ரெண்டு பேர்கிட்டயாவது பேசிடுவேன். ‘‘நீ மாறவே இல்லையேடா’’னு ஆச்சர்யமா கேட்பாங்க. ‘‘நீ முன்னாடி பெஞ்ச், நான் பின்னாடி பெஞ்ச். நீ 6 -ஏ, நான் 6 - பி இதுதான் டிஃபரெண்ட். வேற எப்படி மாற முடியும்?’’னு கேட்பேன்.

எல்லாருக்கும் லவ்வர், மனைவின்னு வர்றப்ப அவங்க அழகா இருக்கணும்னு விரும்புவாங்க. ஆனா, ஃபிரெண்ட்ஷிப்ல மட்டும் அழகை பார்க்குறதே இல்லை. எல்லாரும் அழகுதான். ஒல்லியா ஒருத்தன் இருப்பான். ஆனா, அவன் வாட்ட சாட்டமா இருக்கிற நண்பனை போட்டு அடிப்பான். இதெல்லாம் நட்புல மட்டும்தானே சாத்தியம். நம்ம உடம்புல கை, காலுங்க வளர்றது எப்படி நமக்குத் தெரியறதில்லையோ, அந்த மாதிரிதான் ஃபிரெண்ட்ஷிப்பும். எப்படி அது வளருதுன்னே தெரி யாது. ‘40 ஆண்டுகால நட்பு’ என்பார்களே… ‘என்னோட ஸ்கூல் டேஸ் ஃபிரெண்ட்ஷிப்பும் அப்படித்தான்’னு காலரைத் தூக்கிவிட்டு சிரிச்சிக்கிட்டே சொல்லிக்குவோம்.

எனக்குத் தெரிஞ்சு ‘பணம் இல்லை’, ‘வேலை இல்லை’, ‘அம்மா இல்லை’, ‘அப்பா இல்லை’, ‘அண்ணன் இல்லை’, ‘தங்கை இல்லை’, ‘படிப்பு இல்லை’ ‘கார் இல்லை’ இப்படி ஏதாச்சும் ஒண்ணு எல்லார் வாழ்க்கையிலும் இல்லன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, யாருமே எனக்கு ஃபிரெண்ட்ஸ் இல்லைன்னு சொல்லி கேள்விப்பட்டதே இல்லை.

சென்னையில விவேகானந்தா கல்லூரி பக்கத்துல வீடு இருந்தப்போ, அங்கே ஒரு குரூப், ஸ்கூல்ல ஒரு குரூப், தூரா கிராமத்துல ஒரு குரூப்னு இப்படி எல்லா இடத்துலயும் எனக்கு நண்பர்கள் இருக்காங்க. இதுல நாலு பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். நான் அழுதா அழுவாங்க. நான் சிரிச்சா சிரிப்பாங்க. எனக்கு ஒரு கஷ்டம்னா, அது அவங்களுக் கும்தான். அவங்களுக்குன்னா அது எனக்கும்தான். அதேபோல, அம்மா, அப்பான்னு யார்கிட்டயும் சொல்லமுடி யாத விஷயத்தைக்கூட நண்பர்கள்ட்ட சொல்லலாம். அவங்க மட்டும்தான் நம்மல ‘ஜட்ஜ்’ஜே பண்ண மாட்டாங்க. அப்படிப்பட்ட நண்பர்களோட சேர்ந்து தான் சிலதை செய்யவும் முடியும். நான் என்ன செய்தேன்? அதை அடுத்த வாரம் சொல்றேனே.

இந்த வாரம் இந்தத் தொடரை எழுதிட்டு படிச்சு பார்த்தப்போ, ஒரே தத்துவமா இருக்கோன்னு தோணிச்சு. உடனே ஒரு நண்பர்ட்ட படிச்சுக் காட்டினேன். ‘‘பரவாயில்லடா… இதை படிக்கிற எல்லோருக்குமே ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க. புடிக்கும்டா... ரொம்பப் புடிக்கும்!’’னு சொன்னான். நானும் ஓ.கேன்னு சொல்லிட்டேன். இதுதான் ஃபிரெண்ட்ஷிப். இப்போ இதை நீங்க படிக்கிறீங்க!

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x