Published : 10 Feb 2016 10:57 AM
Last Updated : 10 Feb 2016 10:57 AM

40 வயதை தாண்டிய காதல்தான் நிஜமானது: இயக்குநர் எம்.ஆர்.பாரதி நேர்காணல்

பத்திரிகையாளர், விளம்பரப் பட இயக்குநர், பதிப்பாளர் என பன்முகம் கொண்ட எம்.ஆர்.பாரதி, இப்போது முதல் முறையாக ‘அழியாத கோலங்கள்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் வேலைகளில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்தோம்.

இந்தப் படம் பாலுமகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்தின் ரீமேக்கா?

‘அழியாத கோலங்கள்’ படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எங்களுடைய குரு பாலுமகேந்திராவுக்கு மரியாதை செய்யவே இந்தத் தலைப்பை வைத்தோம். மற்றபடி அவருடைய படங்களை ரீமேக் செய்வது என் நோக்கமல்ல.

இந்தப் படத்தின் கதைக்களம் என்ன?

கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு ஆணும், பெண்ணும் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்கள் சந்திக்கிற ஒரு இரவு எப்படி இருக்கும் என்பது தான் இந்தப் படத்தின் கதை. இது வழக்கமான கதை அல்ல. நான் 20 ஆண்டுகளாக இயக்குநர் ஆவதற்கு முயற்சி செய்து வருகிறேன். என் நண்பர்களோடு அமர்ந்து பல கதைகளை விவாதித்திருக்கிறேன். அவ்வப்போது ஒரு கதையை எழுதுவேன். ஆனால், எழுதி முடிக்கும்போது அக்கதை எனக்கே பிடிக்காமல் போய்விடும்.

ஏற்கெனவே மற்றவர்கள் செய்த விஷயத்தையே பண்ணக் கூடாது. ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இறுதியாக நானும் என் நண்பர் அர்ச்சனாவும் ஒரு கதையைப் பற்றி பேசினோம். அக்கதை தமிழுக்கு புதுமையாக இருந்தது. படம் பார்ப்பவர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான கதைக்களத்தை இப் படம் கண்டிப்பாக கொடுக் காது என்பதால் அதை படமாக இயக்குகிறேன்.

40 வயது கடந்த நாயகிகளை வைத்து படம் எடுக்கிறீர்களே?

40 வயது பெண்களுக்கான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி சொல்வதற்கு படங்கள் எடுக்கப்படவில்லை. ஆண்களைப் பொறுத்தவரை 50 வயது ஆண்களை மையப்படுத்திக்கூட படங்கள் வருகின் றன. ஆனால் நாயகிகள் விஷயத்தில் அவ்வாறு வருவதில்லை. நடுத்தர வயது பெண்களின் கதைகளை யாரும் யோசிப்பதே இல்லை. அவர்களை ஒன்று அம்மாவாக ஆக்கிவிடுகிறார்கள், இல்லையென்றால் அண்ணி யாக்கிவிடுகிறார்கள்.

அதை தமிழ் சினிமாவின் ஒரு குறையாகவே பார்க்கிறேன். 40 வயது பெண்களுக்கான பிரச்சினைகளை அலசும் படங்களை தொடர்ச்சியாக பண்ண வேண்டும் என்பதில் நானும், அர்ச்சனாவும் உறுதியாக இருக்கிறோம். 40 வயதில்தான் உண்மையான காதல், பாசம் எல்லாமே சரியாக இருக்கும். 40 வயதைத் தாண்டிய காதல்தான் நிஜமான காதல் என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்கும் பி.சி.ஸ்ரீராமுக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறுகிறார்களே?

நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். நான் பார்த்த படங்கள், படித்த கதைகள் என நிறைய பேசிக் கொண்டே இருப்போம். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்தார் பி.சி.ராம். அவரது முதல் படத்துக்கு கதை, வசனம் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படம் பெரியளவுக்கு ஹிட்டாகவில்லை. நான் கண்டிப்பாக ஒரு நல்ல படம் பண்ண வேண்டும், பி.சி.ராம் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அவருடைய நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் நல்ல படங்களை நான் கொடுப்பேன்.

பாலுமகேந்திராவிடம் நீங்கள் பணியாற்றவில்லை. இருப்பினும் அவர் மீதான ஈர்ப்பு வருவதற்கான காரணம் என்ன?

மக்களுக்கு நல்ல, தரமான படங்களைக் கொடுத்தவர் பாலுமகேந்திரா சார். அதனாலேயே எனக்கு அவர் மீது ஈர்ப்பு வந்தது. அவரைப் போல நானும் தரமான படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x