Published : 16 Jul 2021 11:09 PM
Last Updated : 16 Jul 2021 11:09 PM

சொகுசு கார் வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம்: நடிகர் விஜய் மேல்முறையீடு

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கு நுழைவுவரி செலுத்தாத காரணத்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவுசெய்யப்படவில்லை. அதையடுத்து விஜய் வாங்கிய அந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் என்ற சி.ஜோசப் விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘2012-ம் ஆண்டு வாங்கிய சொகுசு காருக்கு இறக்குமதிக்கான தீர்வை செலுத்திவிட்டேன். ஆனால் நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதைப் பதிவு செய்ய முடியும் என அதிகாரிகள் கூறிவிட்டதால் அந்தக்காரை பயன்படுத்த முடியவில்லை. ஆகவே இதுதொடர்பாக வணிகவரித் துறை மற்றும் வாகன போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்து, எனது காரை பதிவு செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடாமலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, மனுதாரர் பிரபல திரைப்பட நடிகர் என தெரிவித்தார். திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும். வரி வருமானம், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வரி என்பது வருமானம் ஈட்டக் கூடியவர்கள் கட்டாயமாக நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தானேயன்றி, அது தானாக மனமுவந்து வழங்கும் நன்கொடை அல்ல.

பொதுமக்கள் செலுத்தும் வரியின் மூலமாகக் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டே கல்வி, மருத்துவம், பாலங்கள், ரயில்வே, சாலை, துறைமுகம், சட்டம் - ஒழுங்கு, வறுமை ஒழிப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. தமிழகத்தில் புகழ்பெற்ற நடிகர்கள் நாட்டை ஆளும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். மனுதாரர் தனக்கு பெருமை சேர்க்க வேண்டும்என்பதற்காக உலகப் புகழ்பெற்ற சொகுசுகாரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதிசெய்துள்ளார். ஆனால் அதற்கு வரிசெலுத்தவில்லை என்பது பெருமை தரக்கூடியதல்ல.

வரி செலுத்த மறுத்து தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. லட்சோபலட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல நடிகர்கள் திரையில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் உண்மையான ஹீரோக்களாகத் திகழ வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் அவர்களை ரீல் ஹீரோக்கள் என நினைத்துவிடுவர். யார், குறித்த நேரத்தில், முறையாக வரியைசெலுத்துகிறார்களோ அவர்களே உண்மையான ஹீரோக்கள்.

நடிகர்களுக்கு திரைப்படம் மூலமாகக்கிடைக்கும் பணம் ஒன்றும் வானத்தில் இருந்து தானாகக் கொட்டவில்லை. ஏழை, எளியவர்கள் ரத்தம் சிந்தி, கடின உழைப்பின் மூலமாக சம்பாதித்த பணத்தைக் கொடுத்து பார்க்கும் திரைப்படங்களின் மூலமாக கிடைத்த தொகையில் இருந்துதான் அவர்கள் வசதி வாய்ப்பாக உள்ளனர். அந்த தொகை மூலமாக, தான் வாங்கிய காருக்கு மனுதாரர் வரி செலுத்த மறுப்பது சரியல்ல. ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள மனுதாரர் தனது திரைப்படங்களில் லஞ்சத்துக்கு எதிராகவும், பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்பவராக தன்னை பிரதிபலிக்கும் அதேநேரத்தில் இதுபோல வரிஏய்ப்பில் ஈடுபடுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.

அவ்வாறு வரி ஏய்ப்பு செய்தால் அது தேசத் துரோகம். எனவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம். அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அவர் அந்த தொகையை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டு நடிகர் விஜய் தொடர்ந்திருந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளும் உலா வந்தன. விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பல கருத்துகள் பதியப்பட்டன.

இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் திங்கள்கிழமை ஜூன் 19 ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x