Published : 12 Jul 2021 07:32 PM
Last Updated : 12 Jul 2021 07:32 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்த நடிகர்கள் 15 வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் 'கனா காணும் காலங்கள்'. பள்ளியில் படிக்கும் பதின்ம வயதுச் சிறுவர்களின் வாழ்க்கையைச் சொன்ன இந்தத் தொடர் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடருக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்திருந்த முகப்புப் பாடலும் ஹிட்டானது.
இர்ஃபான், நிஷா, கார்த்திக் வாசு, கணேஷ் பிரபு, மோனிஷா, பாண்டி உள்ளிட்ட பல நடிகர்கள் திரையுலகில் நுழைய இந்தத் தொடர் முதல் படியாக இருந்தது. இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் 'கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை', 'கனா காணும் காலங்கள் கல்லூரிச் சாலை' என இரண்டு தொடர்கள் இதன் தொடர்ச்சியாக வெளியாகின.
தற்போது இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் அனைவரும் 15 வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தச் சந்திப்பு விரைவில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.
இதுபற்றித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் கார்த்திக் வாசு, "இதோ ஒரு நற்செய்தி. 'கனா காணும் காலங்கள்' நடிகர்களின் சந்திப்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. நேற்றிரவு நாங்கள் அனைவரும் சந்தித்து, பழைய நினைவுகளைக் கொண்டாட்டமாக நினைவுகூர்ந்தோம். நாங்கள் அனைவரும் இந்தத் தொடரைச் சேர்ந்தவர்கள் என்பதில் அனைவருக்கும் பெருமை. பார்க்க மறக்காதீர்கள். விரைவில் நிகழ்ச்சியின் நேரம் என்ன என்பதைப் பகிர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை நடிகை நிஷா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பிரிவில் பகிர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment