Published : 12 Jul 2021 11:25 AM
Last Updated : 12 Jul 2021 11:25 AM
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை என்பதால், மக்கள் மன்றத்தைக் கலைத்து ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என, 2017, டிச. 31 அன்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த், 2020, டிச. 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறினார். ஆனால், தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனக் கடந்த ஜன.11 அன்று திட்டவட்டமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வந்தார்.
இன்று (ஜூலை 12) திடீரென்று ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்களைச் சந்தித்துப் பேசினார் ரஜினிகாந்த். இது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்து, மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி.
இது தொடர்பாக ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்பு போல் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT