Published : 08 Jul 2021 09:12 PM
Last Updated : 08 Jul 2021 09:12 PM

எங்கள் உரிமையைப் பறித்துவிடாதீர்கள்: ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு பெப்சி எதிர்ப்பு

சென்னை

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக பெப்சி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல், சூர்யா, விஷால், கார்த்தி, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நீரவ் ஷா உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பைத் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

தற்போது தமிழ்த் திரையுலகின் முக்கிய அமைப்பான பெப்சி அமைப்பும், ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மத்திய அரசின் இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள எல்.முருகனுக்குத் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப அரசு திரைப்படங்களைத் தணிக்கைச் சட்டங்களை மாற்ற புதிய வரைவு கொண்டுவர உள்ளதாக அறிந்தோம். ஓடிடி, வெப் சீரிஸ் இணையம் எனத் திரையரங்குகள் அல்லாமல் பல்வேறு விதமான சாதனங்கள் தோன்றிவிட்ட தற்போதைய கால சூழலில் ஆபாசங்கள் மற்றும் அநாகரிகம், வன்முறைகள் வீட்டுக்குள் நுழையாமல் தடுக்க தணிக்கை முறையில் சில மாற்றங்கள் அவசியம் ஆகும். ஆயினும் இந்தப் புதிய வரைவுத் திருத்தங்கள் மூலம் படைப்பாளியின் குரல் ஒடுக்கப்படக் கூடாது என்ற எங்கள் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

அரசின் மீதான விமர்சனமோ, அரசின் செயல்திட்டங்களுக்கு எதிரான கருத்துகளோ அரசிற்கு எதிரானது ஆகாது. விமர்சனங்களை ஏற்று தங்களை நேர்வழிப்படுத்துவது நல்ல அரசின் மாண்பாகும்.

இடுத்துரைக்காத மன்னர்களின் ஆட்சி கெடுப்பதற்கு ஆட்களே இல்லாமல் தானே கெடும் என 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மறையாம் திருக்குறளின் அறம் போதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். இந்தத் தணிக்கை வரைவு திட்டத்திற்கு எதிரான கருத்துகள், அரசிற்கு எதிரான கருத்துகள் அல்ல. அரசு ஒரு செயலைச் செய்ய முனையும்போது அதனைப் பற்றிய விமர்சனங்கள் ஆகும்.

அரசை ஆளுகின்ற ஆளுங்கட்சிக்கோ அல்லது அரசின் கூட்டணிக் கட்சிக்கோ எதிரானது அல்ல. அதனால் ஆளுங்கட்சிக்கும், விமர்சனம் செய்கின்றவர்களுக்கும் மோதல் என்பது போன்ற சூழலை உருவாக்காதீர்கள். இதுவரை ஆட்சியாளர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சுமுகமாகவே இருந்து வருகிறோம். அந்த சுமுக நிலையையே தொடர விரும்புகிறோம்.

எனவே, கருத்துச் சுதந்திரத்தையோ, படைப்பாளியின் எழுத்துச் சுதந்திரத்தையோ தடுக்காமல் மக்களுக்கு ஆதரவான சமூகத்திற்குத் தேவையான கருத்துகளைச் சுதந்திரமான திரைப்படமாக எடுக்கின்ற எங்கள் உரிமையைப் பறித்துவிடாதீர்கள்.

ஒருமுறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் எப்பொழுது வேண்டுமானாலும் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யலாம் என்ற அபாயகரமான விதியையோ அல்லது தணிக்கை செய்கின்ற அதிகாரத்தை அரசிடமோ அல்லது அரசுக்கு ஆதரவான அமைப்பிடமோ தந்துவிட வேண்டாம் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x