Last Updated : 07 Jul, 2021 07:00 PM

 

Published : 07 Jul 2021 07:00 PM
Last Updated : 07 Jul 2021 07:00 PM

தமிழ் இசையின் இனிமை சர்வதேச அளவில் ஒலிக்க வேண்டும்: ‘பாஃப்டா’ விருதாளர் இசையமைப்பாளர் கார்த்திகேயா மூர்த்தி

இந்தியத் திரைத்துறையில் நடிகர்களாகவும், திரைக்குப் பின்னே பணிபுரியும் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிலிருந்து பத்துத் திறன்மிக்க இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் துறையில் மேலும் சாதிப்பதற்கான பயிற்சிகளை ‘பாஃப்டா பிரேக்த்ரூ இந்தியா’ அளிக்க உள்ளது.

இந்தப் பட்டியலில் இளம் இசையமைப்பாளரான கார்த்திகேயா மூர்த்தியும் ஒருவர். பாஃப்டாவால் அடையாளம் காணப்பட்ட இந்தத் திறமையாளர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் அவர்களின் திறமையை மேலும் மெருகூட்டிக் கொள்வதற்கான சாத்தியங்களை உருவாக்குவதே பாஃப்டா விருதின் முக்கிய நோக்கம்.

மதுமிதா இயக்கி சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றதோடு பல விருதுகளையும் பெற்ற ‘கே.டி. (எ) கருப்புதுரை’ திரைப்படத்துக்கு இசையமைத்ததன் மூலம் கார்த்திகேயா மூர்த்திக்கு பாஃப்டா அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தலைமுறை இடைவெளி தாண்டி ஒரு முதியவருக்கும் சிறுவனுக்கும் இடையேயான பாசத்தைச் சொல்லும் அந்தப் படத்தில், நம்முடைய பாரம்பரியமான நாகசுர வாத்தியத்தின் மூலமாகவே மண்சார்ந்த இசையைப் படம் நெடுகிலும் தவழவிட்டிருப்பார் கார்த்திகேயா மூர்த்தி.

இந்தியச் செவ்வியல் இசை வடிவமான கர்னாடக இசை, மேற்குலகச் செவ்வியல் இசை, வால்ட்ஸ், டாங்கோ, ராக், பாப், எலக்ட்ரானிக் வகை இசை வடிவங்களிலும் தன்னுடைய திறனை வளர்த்துக்கொண்டவர் கார்த்திகேயா மூர்த்தி. சுயாதீனப் பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடும் திறமைபெற்ற கார்த்திகேயாவின் ‘மெட்ராஸ் ட்யூன்ஸ்’ இசைக்குழு, பாஃப்டா நடத்திய இசைப் போட்டியில் சிறந்த இசைக்குழுவாகக் கடந்த 2005இல் தேர்ந்தெடுக்கப்பட்டது. போட்டி நடுவராக இருந்து தேர்ந்தெடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

2009இல் கே.பாலசந்தர் தனது ‘ஒரு கூடை பாசம்’ குறும்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அதிலிருந்து பல குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கார்த்திகேயா மூர்த்திக்கு வரத்தொடங்கின.

தொடரும் இசைப் பயணம் குறித்து கார்த்திகேயா மூர்த்தியிடம் நாம் பேசியதிலிருந்து…

'கே.டி. (எ) கருப்புதுரை' திரைப்படம் உங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமான படமாக அமைந்தது?

இந்தப் படத்துக்கான இசைதான் பாஃப்டா விருதுக்கு என்னைத் தகுதி உள்ளவனாக ஆக்கியுள்ளது. அயல்நாட்டில் இருக்கும் பிரபல இசைக் கலைஞர்களோடு சேர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும். இந்த அங்கீகாரம் எனக்குக் கிடைத்ததை இறைவனின் அருள் என்றுதான் சொல்வேன். இன்னமும் உத்வேகத்துடன் செயல்படுவதற்கான உறுதியை இந்தப் பாராட்டு எனக்குக் கொடுத்திருக்கிறது. அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு திரைப்படம், ஓடிடி தளங்களில் வெளியாகவிருக்கும் சில படங்களுக்கும் இசையமைத்துள்ளேன்.

என்னிடம்தான் முதலில் மதுமிதா ‘கே.டி. (எ)கருப்புதுரை’ படத்தின் கதையைக் கூறினார். அப்போதே இந்தப் படம் உள்ளூர் ரசிகர்களைத் தாண்டி சர்வேதேச அளவில் ரசிகர்களை ஈர்க்கும் உணர்வுபூர்வமான கதைக் களத்தோடு இருப்பதை உணர்ந்தேன். ஆகவே, இசையைப் பொறுத்தவரையில் சர்வதேச ரசிகர்களுக்கும் நம்முடைய பாரம்பரியமான இசையின் பெருமைகளை உணர்த்தும் வகையில் இசையமைத்தேன்.

நாகசுரத்தின் இசையையே இரண்டு விதமான பரிமாணங்களில் கொடுத்திருந்தேன். முதியவர் கருப்புதுரை வரும் காட்சிகளில் நமது பாரம்பரியமான ராக பாவத்தோடு நாகசுரம் ஒலிக்கும். சிறுவன் குட்டி பிரதானமாகப் பேசும் இடங்களில் மேற்குலக இசை நுணுக்கத்தின் கூறுகளோடு நாகசுர இசையை அமைத்திருந்தேன். இந்த அணுகுமுறை சரியான பாதையில்தான் பயணிக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியவர், இந்தப் படத்தின் ஒலிப்பதிவாளரான சுபாஷ் சாகு. அவருக்குத் தமிழ் தெரியாது.

ஆனால், படத்தில் இசையின் துணைகொண்டே காட்சிகளின் தன்மையை அவர் புரிந்துகொண்ட விதம், நம்முடைய இசை சரியான உணர்வைத்தான் தருகிறது என்னும் புரிதலை எனக்குள் ஏற்படுத்தியது.

மேற்கத்திய ஜாஸ், ராக், பாப் போன்ற இசை வடிவங்களை நாம் கேட்பது போன்று நம்முடைய பாரம்பரியமான இசையின் செழுமையை அவர்களுக்கும் உணர்த்தும் வகையில் இந்தப் படத்தின் இசையை அமைத்தேன்.

ஜாஸ், ராக் இசையை அதன் தனித்தன்மை மாறாமல் கேட்கிறோம். அவர்களுக்கும் நம்முடைய பாரம்பரியமான செவ்வியல் இசை, கிராமப்புற இசையை அதன் தனித்தன்மை மாறாமல் கொண்டு சேர்ப்பதுதானே நியாயம்.

நீங்கள் வெளிநாட்டு ரசிகர்களும் விரும்பும் வகையில் நாகசுர இசையை இரண்டு டைமென்ஷனில் கொடுத்திருக்கிறேன் என்பது முரண்பாடாக இருக்கிறதே?

நம் ஊரில் ‘கிளாஸிக்கல்’ என்று அழைக்கப்படும் செவ்வியல் இசை என்றாலே அது கர்னாடக சங்கீதம்தான் என்னும் தவறான புரிதல் இருக்கிறது. ஒவ்வொரு இசைக்கும் அதற்கென்று தனிப்பட்ட செவ்வியல் தன்மை இருக்கும். இதன்படி ராக் கிளாஸிக்கல், ஜாஸ் கிளாஸிக்கல் என்றெல்லாம் உண்டு. நாம் கேட்கும் ஜாஸ், ராக் அதன் கிளாஸிக்கல் தன்மையோடு இல்லாதவை. பாப் ராக், மெட்டல், நியூ-ஜாஸ் என மேற்கத்திய நாட்டினர் பல ஆண்டுகளாக அவர்களின் இசையை இப்படி வேர்ல்ட் ஃபியூஷனாக நம்மிடையே கொண்டு சேர்த்துள்ளனர். அதன் சுவை இன்று புரிந்து, அறிந்து நாம் அதன் கிளாஸிக்கல் தன்மையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளோம். நம் நாட்டில் லூயிஸ் பாங்க்ஸ், மாதவ் சாரி போன்ற ஜாஸ் இசை மேதைகள் உருவாகினர்.

நம் தமிழ் இசையின் சுவையை அவர்கள் ரசிக்க ருசிக்க முதலில் அவர்களுக்குப் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்குத்தான் நம் இசையை அடித்தளமாக வைத்து, அவர்களுக்குப் புரியும் வகையில் ஒரு ஃபியூஷன் இசையாக எடுத்துச் செல்கிறோம். பல மேதைகள் இதை எனக்கு முன்பாகவே செய்திருக்கின்றனர். எனக்குப் பிறகும் செய்வார்கள். ஓர் அணிலின் பங்காக நானும் செய்திருக்கிறேன்!

மேற்கத்திய நாட்டினரும் நம் தமிழ் இசையின் சுவை புரிந்து இங்கே வந்து அதை கற்றுக்கொள்ள வேண்டும். அன்று தமிழ் இசையின் பரிமாணம் எந்த ஒரு மாற்றமும் இன்றி எல்லோரிடமும் சேரும். அந்தக் கனவு மெய்ப்பட வேண்டும்!

இவ்வாறு கார்த்திகேயா மூர்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x