Published : 25 Dec 2015 03:57 PM
Last Updated : 25 Dec 2015 03:57 PM
'தனி ஒருவன்' படத்துக்குப் பிறகு வெளியாகும் ஜெயம் ரவியின் படம், ஜனநாதன் வசனத்தில் அவர் உதவியாளர் இயக்கத்தில் வெளியாகும் படம், ஜெயம் ரவி - த்ரிஷா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்ற இந்த காரணங்களே 'பூலோகம்' படத்தைப் பார்க்கத் தூண்டின.
'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தில் பாக்ஸராக நடித்த ஜெயம் ரவி இந்தப் படத்திலும் பாக்ஸராக நடித்திருப்பதால் படம் வேற லெவலில் இருக்குமா? என்று நினைத்தபடி தியேட்டருக்குள் நுழைந்தோம்.
உண்மையில் படம் எப்படி?
'பூலோகம்' கதை: வடசென்னையில் பாக்ஸர்களாக இருக்கும் இரு பரம்பரை குடும்பங்களுக்கும் உள்ள மோதல்தான் கதைக்களம். இந்த போட்டியை மீடியா வியாபாரம் பார்க்க நினைக்கிறது. இந்த போட்டி என்ன மாதிரியானது? யார் கலந்துகொள்கிறார்கள்? மீடியா என்ன செய்கிறது? யார் எப்படி ஜெயிக்கிறார்? என்பது மீதிக்கதை.
குத்துச்சண்டை போட்டிக்குள் டீட்டெய்லிங் கொடுத்த விதத்தில் அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் கவனம் ஈர்க்கிறார். அதில் இருக்கும் நுட்பங்களை கதாபாத்திரங்கள் வழியாக சொன்னது புத்திசாலித்தனம்.
ஜெயம் ரவி நிஜ குத்துச்சண்டை போடும் வட சென்னை இளைஞனாக தோற்றம், உடல் எடை, உடல் மொழி, வசன உச்சரிப்பு என எல்லாவற்றிலும் கடும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அவரின் தொழில் நேர்த்திக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
ஆனால், வலுவான கதைக்களமும், பலவீனமான திரைக்கதையும் இருப்பதால் ஜெயம் ரவியின் அத்தனை உழைப்பும் வியர்வையாய் வீணாகிப் போகிறது.
நல்வழிப்படுத்தும் நல் ஆசானாய் பொன்வண்ணனின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. வழக்கம் போல பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்துக்கான வேலையை செய்கிறார். ஆனால், அது கம்பீரத்தையோ, பயத்தையோ வரவைக்கவில்லை.
த்ரிஷா அடிக்கடி சில காட்சிகளில் வந்து போகிறார். வெளிநாட்டு பாக்ஸராக நடித்திருக்கும் நாதன் ஜோன்ஸ், சண்முகராஜா ஆகியோர் சிறப்பான தேர்வு.
வட சென்னை கலாச்சாரம், மசான கொள்ளை, மக்களின் யதார்த்தம், பாக்ஸிங் பயிற்சிகள், போட்டிகளின் அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளிட்ட அத்தனை நேட்டிவிட்டியையும் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், குத்துச்சண்டையை மையப்படுத்தாமல் கதாபாத்திரத்தின் ஆர்வக் கோளாறு, அடிதடி என்றே முதல் பாதி பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் போட்டியைத் தவிர வேறு எந்த முனைப்பும் இல்லை. ஆனால், கிடைத்த கேப்பில் வசனங்கள் மூலம் சர்வதேச அரசியலைப் பேசி விடுகிறார்கள்.
விறுவிறு என்று நகர வேண்டிய திரைக்கதையில் ''வியாபாரம் சர்வதேசம். அது எல்லை தாண்டி நம்ம சேரிக்குள்ளயும் வந்து காசு பார்க்கும்.''
''எங்க ஏரியாவுல வந்து பாரு எத்தனை தெண்டுல்கர், தோனி, டைசன் இருக்கான்னு தெரியும்'' போன்ற வசனங்கள் மட்டும் கைதட்டலுக்கான ஆறுதல்.
ஜெயம் ரவி பாக்ஸிங் சண்டைக்காக வருந்துவது, இடைவேளை ட்விஸ்ட், பாக்ஸிங் டீட்டெயில் போன்ற சில காட்சிகளே படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
500 கோடி வியாபாரம் செய்யும் பிரகாஷ்ராஜ் 10 ரூபாய் சிகரெட் பிடிப்பது, எதற்கெடுத்தாலும் சங்கத்தில் தீர்மானம் போட கையைத் தூக்குவது, நாதன் ஜோன்ஸை கலாய்ப்பதாக நினைத்து செய்யும் சீரியஸ் காட்சிகளில் தியேட்டரில் சிரித்துத் தொலைக்கிறார்கள். இந்த லாஜிக் ஓட்டைகளை கவனிக்கவே மாட்டீங்களா கல்யாண் சார்!
சதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் வட சென்னை அச்சு அசலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா இசை படத்துக்கு எந்த விதத்திலும் பலம் சேர்க்கவில்லை. மனிதர் உச்ச கட்ட காட்சியில் 'ரெக்யூம் ஃபார் எ ட்ரீம்' இசையை சுட்டு போட்டிருக்கிறார்.
லாஜிக், மேஜிக் தேவையில்லை. சண்டைக் காட்சிகள் இருந்தால் போதும் என்றாலோ, ஃபவர் புல் வசனங்கள் தரும் திருப்தியே என் தேவை என நினைத்தாலோ பூலோகம் உங்களுக்குப் பிடித்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT