Published : 24 Jun 2021 02:02 PM
Last Updated : 24 Jun 2021 02:02 PM

கவியரசு கண்ணதாசன்: பாட்டு மண்டலத்தில் பரவிக் கிடக்கும் பெயர்!

காவிரிமைந்தன்

உற்சாக கங்கை ஓடோடி வருகிறதே கவியரசே உம்மைக் குறித்து எழுதும்போதெல்லாம்!

கணக்கின்றிக் கவிதைகளும் கன்னித்தமிழ்ப் பாடல்களும் எமக்காகத் தந்துசென்ற கவியரசே நின் புகழைத் தினந்தோறும் பாடுவது சுகமல்லவா?

வண்ண விளக்கேற்றி வானெங்கும் வைத்தாலும் ஒரு விடியல் வந்தபின்னர் அவையெல்லாம் காண்பதற்கரியதாம்! ஆனால், எண்ண விளக்கேற்றி வைத்திருக்கிறார் கண்ணதாசன் என்பதால் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அந்த வெளிச்சத்தை உணரலாம்!

பாட்டு மண்டலமெல்லாம் கவிக்கோமகன் பெயர் சொல்கிறது! காற்று வெளியெல்லாம் கண்ணதாசன் பாடல்கள் மிதக்கின்றன! கேட்கும்போதெல்லாம் தேவகானமாய் அவை அறியப்படுகின்றன! நம் தேவைகளுக்கான பதிவுகளாகவே அங்கே வரிகள் விழுகின்றன!!

தனிமனிதன் ஒவ்வொருவரும் இது எனக்கான பாடல் என்று மார்தட்டிக் கொள்வதுவே கண்ணதாசனின் தனித்துவ வெற்றி என்பேன்!

உலகத் தலைமை இன்பம் என்று காதலைப் பற்றிச் சொன்னான் பாட்டுக்கொரு கவி பாரதி! அவர் தொட்டு.. காதலுக்கு வசந்த மாளிகை அமைத்தவன் கண்ணதாசன்!

‘கன்றின் குரலும் கன்னித்தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா’ என்று பாட்டு வரிகளுக்குள் கனிந்த தமிழை மெட்டுக்குள்ளே கட்டியளக்கக் கண்ணதாசனால்தான் முடியும்!

‘அம்மா என்பது தமிழ் வார்த்தை’ என்கிற பாடலிலே நான் அசந்துபோன வரி என்ன தெரியுமா? அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை என்றானே!! அடடா.. அது அடிமனதைத் தொடுகின்றதே..!

பி.மாதவன் என்னும் இயக்குநர் தான் தயாரித்த முதல் படத்துக்காக மங்களகரமாக பாடல் ஒன்று தாருங்கள் என்று கண்ணதாசனிடம் கேட்டபோது.. ‘தேவன் கோவில் மணியோசை’ என்று பல்லவி தந்ததோடு.. ‘பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணியோசை’ என்றானே..! எத்தனை பவித்ரமான சொற்பிரயோகம்!

கட்டுப்பாடுகளுக்குள் கவிதையெழுதுவதைவிட தன்பாட்டுக்கு எழுதுவது சுகம் என்கிற சூத்திரம் தெரிந்த கண்ணதாசன், தானே ஒரு திரைப்படம் தயாரித்து 'மாலையிட்ட மங்கை' என்று பெயரிட்டார்! ‘சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே’ என்று சிருங்கார ரசம் வழியும் பாடல் புனைந்தபோது.. ‘பைங்கனி இதழில் பழரசம் தருவாள் .. பருகிடத் தலைகுனிவாள்’ என்று இதழ் முத்தம் தருவதை இதைவிட இதமாகச் சொன்னவர் யார் எனக் கேட்க வைக்கிறார்!

‘வண்ணத் திலகங்கள் ஒளிவீசும் முகங்கள் எங்கள் திருநாட்டின் குலமாதர் நலங்கள்’ என்று தமிழ்ப் பண்பாடு காத்து எழுதியவனும் கண்ணதாசனே! ‘நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணம் இன்றிப் போய்விடுமோ.. விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா.. இருந்தும் மறைக்க நான் பெண்ணல்லவா..’ என்கிற உன் வரிகளுக்குள் தமிழ்ப் பெண்களின் மரபுவழிச் சீர் காட்சி தருகிறதே!

சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி

என்கிற ‘இதயக் கமலம்’ திரைப்பாடல் வரிகளில் கலவியல் இன்பத்தின் உச்சங்களை மிச்சம் வைக்காமல் சொல்லும் திறம் காட்டினாரே!

சொல்லாமல் தெரியவேண்டுமே

சொல்லவும் தனிமை வேண்டுமே

கண்ஜாடை புரிய வேண்டுமே – யாரும்

காணாமல் ரசிக்க வேண்டுமே என்கிற காதல் இலக்கணத்தை இதைவிட எளிதாய் எடுத்தியம்பியவர் யார்?

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று..

இந்த இரண்டு வரிகள் போதும் ... கண்ணதாசனின் மேன்மையைச் சொல்ல! ஏனைய கவிஞர்கள் எல்லாம் வக்கீல்கள் போல.. கண்ணதாசன் மட்டும்தான் நீதிபதியாகக் காட்சியளிக்கிறார்! எழுதிய எந்த வரியையும் எடுத்துவிட முடியாதபடி.. அதில் ஒரு மந்திர வித்தையைப் பதித்து வைத்திருக்கிறார்!

நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் – இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்கிற வரியெல்லாம் சாதாரணமாய் ஒரு கவிஞன் எழுதிவிடக்கூடியதா என்று எனக்குத் தெரியவில்லை!

மூன்றடி மண்கேட்டான் வாமனன் உலகிலே

மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே

வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே

மாறும் அவதாரமே இதுதான் உலகிலே

என்று நான்கு வரிகளுக்குள் புராணக் கதையை உள்புகுத்தி திரைப்படக் காட்சிக்கும்.. பாடலுக்கும் தக்கதோர் வித்தை காட்டும் கண்ணதாசனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா?

வார்த்தை விளையாட்டை நீ நடத்தியதுபோல் யாரிங்கே நடத்தியிருக்கின்றார்? தேன் தேன் என்று ’பார்த்தேன் சிரித்தேன்’ பாடலில் ஒரு சொட்டுத் தேன்கூட சிந்தாமல் ரசிக்க வைத்தாய்! காய் காய் என்கிற பாடலாம் அத்திக்காய் காய் காய்.. இரட்டுற மொழிதலுக்குத் தனி இலக்கணம் படைத்தாய்! ஊர் ஊர் என்கிற பாடலாகக் காட்டுரோஜாவில் இடம்பெறும் எந்த ஊர் என்றவனே .. பாடல் காட்டாத ஊர் இங்கே ஏதுமில்லை!

கம்பனில் தோய்ந்து கவிதைகள் தீட்டிய கவியரசே.. வண்ணங்கள் அங்கே வாய்திறந்து காட்டிய ’பால்வண்ணம்.. பருவம் கண்டேன்’ பாடலில் வண்ணம்..வண்ணம்.. மிளிர்ந்ததே!

’மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் எழுதப்பட்ட ’வசந்தகால நதிகளிலே’ என்கிற பாடலில்கூட அந்தாதி எழுதி அசத்தினாயே!

ஒப்பிடமுடியாத தத்துவங்களைப் போகிற போக்கில் சொன்னவர் - கண்ணதாசனே நீ ஒருவன்தானே எங்கள் கண்ணில் தெரிகிறாய்! தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலில்.. தத்துவ தீபங்கள் எல்லா வரிகளிலும் ஒளிசிந்த சித்தர் வடிவம் காட்டியதும் நீயன்றோ?

பட்டுத் தெறிக்கும் முத்துகள் போன்ற தத்துவங்கள்.. சட்டென்று நினைவுக்கு வரும் சோகப் பாடல்களின் பல்லவிகள்.. இத்தனை சரளமாய் கவிஞருக்கு வசப்பட்டது எப்படி என்று வியக்காதோரில்லை! சிறுவயதில் அவரின் தாய்.. நாளை என் மகன் ஆயிரமாயிரம் பாடல்களுக்குப் பல்லவி கொடுப்பான் என்று சொன்ன சொல் உண்மையானதே! கண்ணதாசன் ஒருவருக்குத்தான் கற்பனைத் திறனுடன் கலந்து.. அற்புதமாய் வாழ்க்கைத் தத்துவங்களைப் படம்பிடிக்கும் வித்தை வாய்த்தது! அந்த வகையில் கண்ணதாசனை மிஞ்ச இன்னும் தமிழ்த் திரையில் வேறொருவர் பிறக்கவில்லை என்பது சர்வ சத்தியம்! அனுபவங்கள் எல்லோருக்கும் அமைகின்றன! அவற்றை மொழிபெயர்க்கக் கண்ணதாசனால் மட்டும்தான் முடிந்தது என்பதே உண்மை!

கவிஞரின் வாழ்க்கையும் வரலாறும் எத்தனை முறை கேட்டாலும் புதுமையானது! எவர் சொல்லிக் கேட்டாலும் இனிமையானது! அவர்போல் ஒரு கவிஞரை இனி எங்கே காண்பது? வாராது வந்த வான் மழைபோல்.. வண்டமிழுக்கு வளமான செல்வங்களை வாரி வழங்கிய வள்ளலவர்!

அவர் பாடல்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்குமானது! இந்தச் சொந்தம்தான் கண்ணதாசன் என்கிற கவியை மட்டும் மக்கள் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமரச் செய்தது! காலம் இன்னும் எத்தனை கவிஞர்களைப் பிரசவித்தாலும் வான்புகழ் வள்ளுவன்போல் இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வார் கண்ணதாசன்!

உணர்ச்சி சூறாவளியின் மைய மண்டபத்தில் மனம் படுகிற அத்தனை இன்ப துன்பங்களுக்கும் அர்த்த புஷ்பங்களைப் பாட்டு வரிகளில் படைத்துச் சென்ற பாவலன் தன் வாழ்க்கை வழியில் சந்தித்த அனுபவங்களைப் பாடல் மொழியாக மாற்றிடும் வித்தகம் தெரிந்தவராக!

ஊன் உருக.. உயிர் உருக என்றெல்லாம் பக்திப் பாசுரங்கள் எழுதப்பெறும் என்பார்கள்! என்னைப் பொறுத்தவரை கண்ணதாசன் எழுதிய பாட்டு வரிகளில் உருகாத நெஞ்சம் ஒன்று தமிழர்களின் வாழ்வில் காண முடியாது என்றே சத்தியம் செய்கிறேன்!

கலைமகள் கரங்களில் தவழும் வீணை ராகங்களைத் தரும்! கவியுலகில் பிறக்க வைத்து கலைமகள் தனக்கொரு மகனைத் தருவித்துக்கொண்டாள். அவர்தான் கண்ணதாசன் என்றால் அது மிகையில்லை!

- காவிரிமைந்தன்,

தொடர்புக்கு: kavirikkts@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x