Published : 19 Jun 2021 04:36 PM
Last Updated : 19 Jun 2021 04:36 PM

'பிரேமம்' இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு

ஃபேஸ்புக் பக்கத்தில் 'பிரேமம்' இயக்குநர் விடுத்த வேண்டுகோளை கமல் ஏற்றுக்கொண்டார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் 'தசாவதாரம்'. 2008-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்தப் படம் உருவான விதம், அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டார் கமல்.

'தசாவதாரம்' படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமலே எழுதியிருந்தார். இந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். சமூக வலைதளத்தில் கமலின் நீண்ட பதிவு பெரும் வைரலானது.

இந்தப் பதிவுக்கு 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பின்னூட்டம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் "கமல்ஹாசன் சார், 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை எப்படிப் படம் பிடித்தீர்கள் என்று எனக்குச் சொல்ல முடியுமா? 'தசாவதாரம்' என்பது திரைப்படமாக்கலில் ஒரு முனைவர் பட்டம் பெறுவதைப் போல, 'மைக்கேல் மதன காமராஜன்' பட்டப்படிப்பைப் போல" என்று குறிப்பிட்டு இருந்தார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் பின்னூட்டமும் பலரது கவனத்தை ஈர்த்து வைரலானது.

அல்போன்ஸ் புத்திரனின் பின்னூட்டத்துக்கு பதிலளிக்கும்விதமாக கமல், "நன்றி அல்போன்ஸ் புத்திரன். விரைவில் சொல்கிறேன். அதிலிருந்து எவ்வளவு தூரம் உங்களால் கற்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, நான் முன்னரே சொன்னது போல, அது எனக்கு நிபுணத்துவம் பெற்றவர்களிடம் கற்ற வகுப்பைப் போல. இவ்வளவு வருடங்கள் கழித்து அதைப் பற்றிப் பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தருகிறது" என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.

கமலின் இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அல்போன்ஸ் புத்திரன், "கோடி நன்றிகள் சார். உங்களிடமிருந்து கற்பது அற்புதமாக இருக்கும். எனக்கு மட்டுமல்ல, இயக்கம் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பல கோடி மக்களுக்கும், மாணவர்களுக்கும். நன்றி சார்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x