Published : 14 Jun 2021 10:49 AM
Last Updated : 14 Jun 2021 10:49 AM
முதல்வர் பாதுகாப்பில் பெண் போலீஸாருக்கு விலக்கு அளித்ததற்காகத் தமிழக அரசுக்கு 'மிக மிக அவசரம்' படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
முதல்வர் செல்லும் பாதை உட்பட பந்தோபஸ்துக்காக சாலைகளில் பெண் போலீஸாரைப் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் நேற்று (ஜூன் 13) வெளியாகின.
இதற்கு பெண் போலீஸார் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், 'மிக மிக அவசரம்' படக்குழுவினரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்து வெளியான படம் 'மிக மிக அவசரம்'. பெண் போலீஸாரின் வலிகளை இந்தப் படம் பேசியது.
தற்போது தமிழக அரசின் அறிவிப்புக்கு, சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"பெண் போலீஸாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காகச் சாலைகளில் நிற்பது. அதிலென்ன இருக்கிறது எனச் சாதாரணமாகக் கடந்து போகும்போது, ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை 'மிக மிக அவசரம்' படத்தில் சொல்லியிருந்தோம்.
ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால், அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெருவெற்றியைத் தந்தது. திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். மகிழ்கிறேன்.
பெண் போலீஸார் சாலையோரப் பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், டிஜிபிக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், படத்தை வெளியிட்ட லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன், இணைந்து தயாரித்த குங்ஃபூ ஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், பிஆர்ஓ ஜான் அனைவருக்கும் நன்றிகள்.
படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் 'மிக மிக அவசரம்' படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன்”.
இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி மட்டுமன்றி படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT