Published : 03 Jun 2021 03:14 PM
Last Updated : 03 Jun 2021 03:14 PM

தூய பேரன்பினைப்‌ பொழிந்த ஓர்‌ அண்ணனை இழந்துவிட்டேன்: ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு கமல் இரங்கல்

சென்னை

தூய பேரன்பினைப்‌ பொழிந்த ஓர்‌ அண்ணனை இழந்துவிட்டேன் என்று இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் மறைவு தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘கல்யாணராமன்’, ‘எல்லாம் இன்பமயம்', ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். வயது மூப்பின் காரணமாக இன்று (ஜூன் 3) காலை காலமானார். இவருடைய மறைவுக்குப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கமலை வைத்துப் பல படங்கள் இயக்கியது மட்டுமன்றி, நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தவர் ஜி.என்.ரங்கராஜன். இவருடைய மறைவு குறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நான்‌ சினிமாவில்‌ நுழைந்த காலம்‌ தொட்டு இறக்கும்‌ தறுவாய்‌ வரை என்‌ மீது மாறாத பிரியம்‌ கொண்டவர்‌ இயக்குநர்‌ ஜி.என்‌. ரங்கராஜன்‌. கடுமையான உழைப்பால்‌ தமிழ்‌ சினிமாவில்‌ தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக்‌ கொண்டவர்‌. இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ பல திரைப்படங்களைத் தமிழ்‌ ரசிகர்களுக்குத்‌ தந்தார்‌. அவரது நீட்சியாக மகன் ஜி.என்‌.ஆர்‌. குமரவேலனும்‌ சினிமாவில்‌ தொடர்கிறார்‌.

கல்யாணராமன்‌, மீண்டும்‌ கோடுலா, கடல்‌ மீன்கள்‌, எல்லாம்‌ இன்பமயம்‌, மகாராசன்‌ என என்னை வைத்துப் பல வெற்றிப்‌ படங்களைத்‌ தந்தவர்‌. என்‌ மீது கொண்ட மாறாத அன்பால்‌, தான்‌ கட்டிய வீட்டிற்கு 'கமல்‌ இல்லம்‌' என்று பெயர்‌ வைத்தார்‌. இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக்‌ கூடும்‌.

ஜி.என்.ரங்கராஜனுடன் மகன் ஜி.என்.ஆர் குமாரவேலன்

ஜி.என்‌.ஆர்‌ தன்‌ வீட்டில்‌ இல்லையென்றால்‌ ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ்‌ ரோட்டில்தான்‌ இருப்பார்‌ என்றே எங்களை அறிந்தவர்கள்‌ சொல்வார்கள்‌. சினிமாவில்‌ மட்டுமல்ல, மக்கள்‌ பணியிலும்‌ என்னை வாழ்த்தியவர்‌. எப்போதும்‌ எங்கும்‌ என்‌ தரப்பாகவே இருந்தவர்‌.

சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம்‌ செய்து பொலிவோடு இருக்க வேண்டும்‌. கமல்‌ பார்த்தால்‌ திட்டுவார்‌ என்று சொல்லி வந்தார்‌ எனக் கேள்வியுற்றேன்‌. தான்‌ ஆரோக்கியமாக இருப்பதையே நான்‌ விரும்புவேன்‌ என்பதை அறிந்தவர்‌.

நிபந்தனையற்ற தூய பேரன்பினைப்‌ பொழிந்த ஓர்‌ அண்ணனை இழந்துவிட்டேன்‌. அண்ணி ஜக்குபாய்க்கும்‌, தம்பி இயக்குநர்‌ ஜி.என்‌.ஆர்‌. குமரவேலனுக்கும்‌ குடும்பத்தார்க்கும்‌ என்‌ ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x