Published : 30 May 2021 07:03 PM
Last Updated : 30 May 2021 07:03 PM

கரோனா தடுப்பூசியால் உருவான சர்ச்சை: மீரா சோப்ரா விளக்கம்

மகாராஷ்டிரா

கரோனா தடுப்பூசியால் சர்ச்சையில் சிக்கிய மீரா சோப்ரா, அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிகையாக வலம் வருபவர் மீரா சோப்ரா. தமிழில் 'அன்பே ஆருயிரே', 'ஜாம்பவான்', 'லீ', 'மருதமலை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு தனது சமூக வலைதளத்தில் அதற்கான புகைப்படத்தை வெளியிட்டார். அதன் பிறகுதான் மீரா சோப்ரா சர்ச்சையில் சிக்கினார். தன்னை முன்களப் பணியாளர் எனப் பதிவு செய்து முன்னிலைப்படுத்தி மீரா சோப்ரா தடுப்பூசி போட்டுக் கொண்டார் எனத் தகவல் வெளியானது. பலரும் அதற்கான அடையாள அட்டையையும் பகிர்ந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பலரும் மீரா சோப்ராவைக் கடுமையாகத் திட்டித் தீர்த்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவாகவே, மீரா சோப்ரா தனது ட்விட்டர் பதிவில் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நாம் எல்லாருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புகிறோம். அதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்கிறோம். அப்படி நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் உதவி கோரினேன். 1 மாத முயற்சிக்குப் பின் ஒரு தடுப்பூசி மையத்தில் என்னால் பதிவு செய்துகொள்ள முடிந்தது.

பதிவு செய்துகொள்ள எனது ஆதார் அட்டையை அனுப்பச் சொன்னார்கள். அதை மட்டும்தான் நான் அனுப்பி வைத்தேன். தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அடையாள அட்டை என்னுடையது அன்று. உங்கள் கையெழுத்து இல்லா வரை எந்த அடையாள அட்டையும் செல்லாது. (எனவே) தற்போது பகிரப்பட்டிருக்கும் அடையாள அட்டையை ட்விட்டரில்தான் நானே முதலில் பார்த்தேன்.

இதுபோன்ற பழக்கங்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இப்படி ஒரு (போலி) அடையாள அட்டை (என் பெயரில்) உருவாக்கப்படுகிறது என்றால் ஏன், எதற்கு என்று நானே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்."

இவ்வாறு மீரா சோப்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x