Published : 30 May 2021 12:40 PM
Last Updated : 30 May 2021 12:40 PM
எத்தனையோ பேரின் உயர்வுக்குக் காரணமாக இருந்தார் வெங்கட் என்று இயக்குநர் சுப்பிரமணிய சிவா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார் வெங்கட். பல்வேறு சீரியர்கள், படங்களிலும் நடித்து வந்தார். இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (மே 29) அதிகாலை காலமானார். இவருடைய மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வெங்கட் மறைவு குறித்து இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
"வெங்கட்டா, சுபா வெங்கட் என்றழைக்கப்படும் வெங்கட் சார். சாலிகிராமம், பாரதியார் தெரு பிரகாஷ்ராஜ் சார் ஆபிஸில் நான் ’தயா’ படத்தில் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றிய போதிலிருந்தே எனக்குப் பரிச்சயமானவர்.
வெங்கட் சார் கலைகளின் காதலன். ஒரு நல்ல புத்தகம் படித்தால், ஒரு நல்ல படம் பார்த்துவிட்டால், ஒரு சுவாரசியமான செய்தி தெரிந்துகொண்டால், அது யாருக்குத் தேவையாக இருக்குமோ அவர்களிடம் உடனடியாகப் பகிர்ந்து கொள்வார். அதில் அவருக்கான ஆதாயம் என்ன என்பதைக் கூட கருத்தில் கொள்ள மாட்டார்.
அவர் மேல் சில எதிர்மறை, காசு சம்பாதித்து விட்டார் என்ற விமர்சனமும் உண்டு. ஆனால், காருக்கு டியூவ் கட்ட முடியாததை வெளியில் சொல்லாமல்தான் இருந்தார். அதைப் பற்றி ஒரு நாளும் கவலையோ சுணக்கமோ இல்லாமல், சினிமாத்துறை வளர்ச்சிக்கான ஏதாவது யோசனையை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டே இருப்பார்.
விதுரன் யூடியூப் சேனலில் தங்கு தடையின்றி அருமையாகப் பேசுவார். எத்தனையோ பேரின் உயர்வுக்குக் காரணமாக இருந்தார். மகன் சித்தார்த்தை இயக்குநராக்கப் பெருங்கனவை மனதில் சுமந்திருந்தார். நண்பர்களுக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக நின்றார். இப்படி நிறையச் சொல்லலாம் வெங்கட் சாரைப் பற்றி. திரும்பி வந்துவிடுவார் என்றுதான் நானும் இருந்தேன்.
இன்று அவர் இல்லை. சுபா அண்ணிக்கோ, சித்தார்த்துக்கோ, குடும்பத்தாருக்கோ, அவர் நண்பர்களுக்கோ ஆறுதல் சொல்ல என்ன இருக்கிறது. வணக்கமும், நன்றியும் வெங்கட் சார். இறைவனின் திருவடியில் இளைப்பாறுங்கள்”.
இவ்வாறு சுப்பிரமணிய சிவா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT