Published : 28 May 2021 05:08 PM
Last Updated : 28 May 2021 05:08 PM
'நரகாசூரன்' படத்தின் வெளியீட்டு சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
தனுஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு தனுஷ் இந்தியா திரும்பியவுடன், அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
'துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பைனான்ஸ் சிக்கலால், இன்னும் இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிவிட்டார். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், எதுவுமே சுமுகமாக முடியவில்லை.
தற்போது, 'நரகாசூரன்' திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படம் மட்டுமன்றி 'கடைசி விவசாயி' உள்ளிட்ட 10 படங்களை சோனி லைவ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT