Published : 14 May 2021 01:05 PM
Last Updated : 14 May 2021 01:05 PM

ஊரடங்கை மீறி நடக்கும் திரைப்படப் படப்பிடிப்புகள்: நடவடிக்கை எடுக்க சாந்தினி வேண்டுகோள்

தமிழகத்தில் ஊரடங்கையும் மீறி திரைப்படப் படப்பிடிப்புகள் நடப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை சாந்தினி ட்வீட் செய்துள்ளார்.

'சித்து +2' திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. 'வில் அம்பு', 'கவண்', 'கட்டப்பாவ காணோம்', 'வஞ்சகர் உலகம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'தாழம்பூ', 'ரெட்டை ரோஜா' எனத் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் தமிழகத்தில் மே 24ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சின்னத்திரை, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நடிகை சாந்தினி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னும் படப்பிடிப்புகள் நடப்பதாகப் பகிர்ந்துள்ளார்.

"முழு ஊரடங்குதானே நடைமுறையில் இருக்க வேண்டும்? பிறகு எப்படி மறைமுகமாகச் சென்னையில் பல படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன? மக்களின் உயிர்தான் எல்லாவற்றையும் விட முக்கியம். நோய்த்தொற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று சாந்தினி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x