Published : 11 May 2021 12:26 PM
Last Updated : 11 May 2021 12:26 PM
நடிகர் கமல் நடிக்கும் 'இந்தியன் - 2' திரைப்படத்தின் தாமதத்துக்குத் தயாரிப்பு நிறுவனமான லைகாதான் காரணம் எனக் குற்றம் சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் கமல் நடிக்கும் 'இந்தியன் - 2' திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, படத் தயாரிப்பு நிறுவனம் லைகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில், இயக்குநர் ஷங்கர் தரப்பில் இன்று (மே 11) பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல உண்மைத் தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
முதலில் இந்தப் படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன்வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
படத்தைத் தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதைக் குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை ரூ.250 கோடியாகக் குறைத்தும், படப்பிடிப்பைத் தொடங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது ஷங்கர் புகார் தெரிவித்துள்ளார்.
தில்ராஜு படத்தைத் தயாரித்திருந்தால் படம் ஏற்கெனவே வெளியாகியிருக்கும் எனவும், அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் பதில் மனுவில் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
நடிகர் கமலுக்கு 'மேக் அப்' அலர்ஜி ஏற்பட்டதால், படப்பிடிப்பு தாமதமானதாகவும், அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் இயக்குநர் ஷங்கர் தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதவிர, படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் கூறியுள்ளார்.
படத் தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகக் கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் ஷங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீணடித்தது லைகா நிறுவனம்தான் எனவும், இந்தக் காலத்தில் தான் சும்மா இருக்க முடியாது எனவும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் ஷங்கர் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT