Published : 07 May 2021 09:34 AM
Last Updated : 07 May 2021 09:34 AM
கரோனா நமக்கு வராது என்ற சிந்தனை யாருக்கும் வேண்டாம் என்று இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் நேற்று (மே 6) ஓரே நாளில் பாடகர் கோமகன், நடிகர் பாண்டு உள்ளிட்டோர் கரோனா தொற்றுக்கு பலியாகினர். மேலும், பிரபலங்கள் பலரும் படப்பிடிப்பு அனைத்தையும் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்கள்.
இதனிடையே கரோனா 2-வது அலை அச்சுறுத்தல் தொடர்பாக இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கரோனா தொற்றை முறியடிக்க மக்கள் அனைவரும் அக்கறையோடு முயல்வதே தீர்வு. என்னதான் அரசும் அரசுத் துறைகளும் முயன்றாலும் தனி மனித சிந்தனையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முன்னேற்பாடு இல்லாதவரை கரோனா ஆபத்துகளைக் கடப்பது கடினம். நமக்கு வராது என்ற சிந்தனை யாருக்கும் வேண்டாம்.
கரோனாவிற்கு உருவமோ அல்லது ஒரு மனிதனைச் சித்திரவதை செய்து ரத்தம் கக்கிச் சாகும் குணம் இல்லாததால் யாருக்கும் அதைப் பற்றிய பயம் இல்லையோ என்னவோ. என் நண்பர் ஒருவர்.. எல்லா வசதிகளும் இருந்தும் அவரை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு கொடுமையானது இந்நோய்.
அத்தியாவசியத் தேவைகளுக்கான தொழில் செய்பவர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவத்துறை, போக்குவரத்துத் துறையில் பணிபுரிவோர், காவல்துறை, செய்தித்துறை. இவர்கள் எல்லாம் நம் பாதுகாப்புக்காகக் களத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் அவர்களை இந்த சிரமத்திற்கு ஆளாக்கப் போகிறோம்.
ஆகவே நமக்கு எங்கிருந்தோ எல்லாம் கிடைத்துவிடுகிறது என்று கருதாமல் நோயை விரைவில் விரட்டியடிக்க ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. ஆகவே நோய் இருப்பதற்கான காரணம் தெரிந்த உடனே சிகிச்சை எடுங்கள். நோயற்றவர்கள் வராமல் தடுக்க முழு முயற்சி எடுங்கள்".
இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT